Latestமலேசியா

ஒரு தலைப் பட்ச மதமாற்றம் செல்லாது! புத்த மதத் தந்தை வழக்கில் வென்றார்!

கோலாலம்பூர், அக்.16- இஸ்லாம் மதத்தை தழுவிய பெண் ஒருவர், தனக்கும் தனது முன்னாள் கணவருக்கும் பிறந்த இரு பிள்ளைகளை ஒருதலைப் பட்சமாக மதமாற்றம் செய்த செயல் சட்டப் படியாக செல்லாது என்று உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

இந்திராகாந்தியின் மூன்று பிள்ளைகளை ஒருதலைப் பட்சமாக அவரின் முன்னாள் கணவர் மதமாற்றம் செய்தது தொடர்பில் கூட்டரசு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முன்னோட்டியாகக் கொண்டு, தாம் இந்த வழக்கிற்கு தீர்ப்பளிப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அஸிஸா நவாவி கூறினார்.

இந்த வழக்கிலும், விவாகரத்து பெற்றுக் கொண்ட இருவருக்கும் பிறந்த குழந்தைகளை, ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பின் அனுமதியின்றி மதமாற்றம் செய்துள்ளதால், அந்த மதமாற்றம் செல்லாது என்று தாம் தீர்ப்பளிப்பதாக அஸிஸா தெரிவித்துக் கொண்டார்.

தனது பிள்ளைகளின் “இஸ்லாம் மதத்தை தழுவும் ஒப்புதல் அட்டை” மற்றும் மதமாற்றம் செய்துக் கொண்டதற்கான சான்றிதழ்கள் ஆகியவை செல்லாது என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று புத்த மதத்தைச் சேர்ந்த தந்தை ஒருவர் நீதிமன்றத்தில் இரு வழக்குகளைத் தொடர்ந்தார்.

அந்தத் தந்தைக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பிள்ளைகள் இஸ்லாம் மதத்தை தழுவி உள்ளனர் என்ற பதிவை, முஸ்லீம் (மதமாற்ற) பதிவுகளிலிருந்து கூட்டரசு பிரதேச இஸ்லாமிய சமய இலாகாவின் பொது இயக்குநர் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அவ்விரு பிள்ளைகளும், தங்களின் தந்தையின் பாதுகாப்பில் உள்ளனர். அவர்களின் மதமாற்றம் விவகாரம் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்ற மனுவையும் நீதிபதி அஸிஸா நிராகரித்து விட்டார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு மே மாதம் 11-ஆம் தேதியன்று, அப்போது எட்டு மற்றும் மூன்று வயது மட்டுமே நிரம்பிய அவ்விரு பிள்ளைகளையும், இஸ்லாத்தை தழுவிய அக்குழந்தைகளின் தாயார், தனது முன்னாள் கணவரின் அனுமதியின்றி, ஒருதலைப் பட்சமாக மதமாற்றம் செய்தார்.

அன்றைய தினத்தன்று, அந்தக் கணவர், தனது மனைவியை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் விண்ணப்பம் சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தத் தந்தையின் சார்பில் வழக்கறிஞர்கள் ஹனி டான், கே.சண்முகா மற்றும் மாட் வோங் ஆகியோர் ஆஜராயினர்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker