Latestமலேசியா

சீபீல்டு கோயில் விவகாரம்: சுமூக தீர்வினைக் காண முடியும்! – வேதமூர்த்தி

கோலாலம்பூர், அக்.16- சுபாங் ஜெயாவிலுள்ள சீபீல்டு ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் அகற்றப்படும் உத்தேசம் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் ஆட்சேபங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் ஒரு சுமூகமான தீர்வைக் காண்பதற்கு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் தாம் தொடர்பு கொண்டு உண்மை நிலவரத்தை அறியும் முயற்சியில் தாம் ஈடுபட்டிருப்பதாக பிரதமர் துறை அமைச்சர் செனட்டர் வேதமூர்த்தி கூறினார்.

கஸக்ஸ்தான் நாட்டிற்கு பணிநிமித்தமாகச் சென்றிருந்த பின்னர் நேற்று தாம் தாயகம் திருப்பிய போது சீபீல்டு கோயிலை தொடர்பான விஷயங்கள் தம்முடைய கவனத்திற்கு வந்ததாக பத்திரிகைகளுக்கு விடுத்த அறிக்கையில் அவர் சொன்னார்.

இடமாற்றம் மற்றும் இழப்பீடு தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு இணக்கத் தீர்ப்பு கிடைத்திருப்பதாகக் கூறப்பட்டாலும் அத்தகைய ஆதாரம் எதுவும் தம்முடைய பார்வைக்கு கிட்டவில்லை என்றார் அவர்.

மலேசிய இந்திய சமுதாயத்தினரிடையே பதட்டமும் உணர்வுப் பூர்வமான ஆட்சேபங்களும் இடம்பெற்று வருவது தமது கவனத்திற்கு வந்ததாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

கோயில் சம்பந்தமான ஆட்சேப நடவடிக்கைகள் தொடரும் நிலையில் சமூக ஊடகங்களில் முரணான அறிக்கைகள் வெளிவருகின்றன என்று தம்முடைய அறிக்கையில் வேத மூர்த்தி சுட்டிக்காட்டினார்.

சமூக ஊடகங்களில் இந்திய சமுதாயத்தினர் மத்தியில் இடம்பெறும் விமர்சனங்கள், முரண்பட்ட வகைகளில் பரவலாகி வருகின்றன. இதனால், நாட்டிலுள்ள மலேசிய இந்திய சமுதாயத்தினர் மத்தியில் அவசியமற்ற மற்றும் தேவையில்லாத பிரச்னைகள் உருவாகின்றன என்று வேதமூர்த்தி குறிப்பிட்டார்.

இது தொடர்பில் உண்மை நிலவரத்தைக் கண்டறிய சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளுடனும் தமது அலுவலகம் தொடர்பு கொண்டு வருகிறது. எனவே, இந்த ஆட்சேப ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் இல்லாமல், சுமூகமான, அமைதியான வழியில் இதற்கான தீர்வைக் காண முடியும்.

நிலைமையை விசாரித்து, உண்மையைக் கண்டறியும் வரையில் மலேசிய இந்திய சமுதாயம் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும் என்று அமைச்சர் வேதமூர்த்தி வேண்டுகோள் விடுத்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker