Latestமலேசியா

மோசடி கும்பலிடம் ரிம.1.2 மில்லியனை இழந்த பெண்ணின் பரிதாபம்!

சுபாங் ஜெயா, அக்.16- பண மோசடி விவகாரத்தில் சம்பந்தப் பட்டுள்ளதாக பெண் ஒருவரை நம்ப வைத்து, பயமுறுத்தி, அவரின் ரிம.1.2 மில்லியன் தொகையை கும்பல் ஒன்று ஏமாற்றியுள்ளது என்று வட்டார ஓசிபிடி துணை ஆணையர் முகமட் அஸ்லின் சடாரி கூறினார்.

கடந்த 5-ஆம் தேதியன்று, அடையாளம் தெரியாத தொலைபேசி நம்பரிலிருந்து, முதலீட்டு நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வரும் 50 வயது மாது ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

“அந்த அழைப்பைச் செய்தவர், கோலத் திரெங்கானு நீதிமன்ற அதிகாரியாக தம்மை அம்மாதுவிடம் அறிமுகம் செய்துக் கொண்டுள்ளார். அந்தப் பெண்ணின் பெயரை யாரோ ஒருவர் பயன்படுத்தி, தனியார் கடனை பெற்றுள்ளதாக, அந்த ஆடவர், அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார்.

“அதன் பின்னர், அந்தப் பெண்ணை, விசாரணை அதிகாரியிடம் பேசுமாறு அந்த ஆடவர் கூறியுள்ளார். தாம் அவ்வாறு எவ்வித கடனையும் பெறவில்லை என்று அந்தப் பெண் மறுத்துள்ளார்” என்று முகமட் அஸ்லின் சொன்னார்.

அந்த 50 வயது மாதுவின் பெயர் மற்றும் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி, ரிம.1.48 மில்லியன் பண மோசடி செய்யப் பட்டுள்ளதாக, அந்த “விசாரணை அதிகாரி” அம்மாதுவிடம் தெரிவித்துள்ளார்.

“அதிர்ச்சி அடைந்த அந்த மாது, அந்த “விசாரணை அதிகாரி” கூறியதை பின்பற்றி, கடந்த 5-ஆம் தேதியிலிருந்து 10-ஆம் தேதி வரை, நான்கு வங்கிக் கணக்குகளுக்கு, ரிம.1.2 மில்லியன் பணத்தை செலுத்தி உள்ளார்.

அந்தப் பண பரிவர்த்தனைகள் அனைத்தும், வங்கி முகப்பிடத்தில் செய்யப்பட்டுள்ளன. அம்மாதுவின் கணவர் அவரை தொடர்பு கொண்ட போது தான், தாம் ஏமாற்றப் பட்டுள்ளதை அப்பெண் அறிந்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பில் போலீஸ் விசாரணை மேற்கொள்ளப் படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker