Latestமலேசியா

அடுக்குமாடியில் சிக்கிய மாணவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்!

சிரம்பான், அக்.18- பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு, மலிவு விலை அடுக்குமாடி கட்டிடத்தில் ஒளிந்துக் கொண்டிருந்த இடைநிலைப் பள்ளி மாணவர்கள், போலீசாருக்கு பயந்து அக்கட்டிடத்தின் வீடொன்றின் பால்கனி வாயிலாக தப்பித்து செல்ல முயற்சித்தனர்.

ஆனால், அங்கிருந்து தப்பிக்க முடியாத வேளையில், வெளியேற முடியாமல் அவர்கள் அங்கு சிக்கிக் கொண்ட்தை தொடர்ந்து, அவர்களை மீட்பதற்காக தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப் பட்டனர்.

ஜாலான் மாணிக்கவாசகம் பகுதியிலுள்ள அந்தக் கட்டிடத்தின் நான்காவது மாடியில், கைவிடப் பட்ட வீடொன்றில் ஒரு மாணவி உட்பட சில மாணவர்கள் பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு பதுங்கி உள்ளனர் என்று அண்டை அயலாளர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த வீட்டை காவல் துறையினர் முற்றுகையிடுவதை அறிந்த அந்த ஐந்தாம் படிவ மாணவர்கள், அந்த வீட்டின் பால்கனி வாயிலாக, மூன்றாவது மாடிக்கு இறங்கி தப்பித்து செல்லலாம் என்று முடிவெடுத்து, அங்கிருந்து இறங்கினர்.

ஆனால், மூன்றாவது மாடியிலுள்ள வீட்டின் பின் கதவுகள் பூட்டப் பட்டிருந்ததால், அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முடியாமல் போயிற்று. அதனால், அவர்கள் அங்கேயே மாட்டிக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, அம்மாணவர்களை மீட்கும் பொருட்டு, சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப் பட்டனர். அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள், ஏணிகளை பயன்படுத்தி, மூன்றாவது மாடியில் சிக்கிக் கொண்ட அந்த மாணவர்களை கீழே இறக்கினர்.

அதன் பின்னர், அந்த மாணவர்களை, போலீசார் விசாரணைக்காக மாவட்ட காவல் நிலையத்திற்கு கொண்டுச் சென்றனர்.

பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு, கைவிடப் பட்ட நிலையில் உள்ள வீடுகளை தேர்ந்தெடுத்து மாணவர்கள் தங்களின் ‘கூடாரமாக’ அவற்றை பயன்படுத்தி வருகின்றனர் என்று லோபாக் சட்டமன்ற உறுப்பினர் சீவ் சே யோங் கூறினார்.

அதன் தொடர்பில், அப்பகுதி வாழ் மக்கள் பலமுறை புகார் கொடுத்துள்ளனர் என்றும், அப்பழக்கத்தை மாணவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், அவர்கள் இம்முறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker