Latestமலேசியா

உடல்நலம் சரியில்லை என்றாலும் வீடியோ கேம் தயாரிக்கும் 12 வயது சிறுவன்!

மாரான்,அக்.19- ‘Hysteria’ எனப்படும் ஒருவகை நரம்புத் தளர்ச்சி பாதிப்பு காரணமாக படிப்பை ஐந்தாம் வகுப்போடு நிறுத்திய 12 வயது சிறுவன் முகமட் தாக்கிப் ஷாஹிரா ஜாம்ஸூரி வீடியோ கேம் ஒன்றை தயாரித்து வருகிறார் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால், 70 விழுக்காடு தயார் நிலையில் இருக்கும் தாக்கிப்பின் வீடியோ பற்றி கேள்விப்பட்டு அச்சிறுவனைச் சந்திக்க வேண்டும் என்று இளைஞர் விளையாட்டு அமைச்சர் சைட் சாடிக்கே கூறியுள்ளாராம்.

சிலாங்கூர், பண்டார் பாரு பாங்கி, ஜாலான் தீகா தேசியப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த தாக்கிப்பிற்கு அடிக்கடி Hysteria வந்ததால் கடந்தாண்டு மார்ச் மாதத்தில் படிப்பை விட்டார். அதன் பிறகுச் Hysteria பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக தாக்கிப்பும் அவரது தாயார் ராப்பியாவும் அவர்கள் சொந்த ஊரான மாரானுக்கு மாற்றலாகிச் சென்றனர்.

படிப்பை பாதியிலேயே விட்டதால் ஓய்வாக இருக்கும் போதெல்லாம் தாக்கிப் வீட்டருகேயுள்ள மலேசிய இணைய மையத்திற்குச் செல்வாராம். அங்குத்தான் தாக்கிப் தனது சொந்த முயற்சியின் அடிப்படையில் அந்த வீடியோ கேம்மைத் தயாரிக்க தொடங்கியிருக்கிறார்.

‘நான் வீடியோ கேம் தயாரிக்கிறேன்’ என்று அவர் சொல்லும் போதெல்லாம் அவர் பொய் சொல்கிறார் என எல்லோரும் நினைத்திருக்கிறார்கள். தன்னை யாரும் நம்பவில்லை என்ற ஒன்றையே பெரும் சவாலாக எடுத்துக் கொண்டு தாக்கிப் அந்த வீடியோ கேம்மை மேம்படுத்தி வருகிறார். தனது வீடியோ கேம்மிற்கு பெயர் சூட்டுவதற்காக பேஸ்புக்கில் அவர் மக்களின் அபிப்பிராயத்தைக் கேட்டதும்தான் எல்லோரும் வியப்பில் கண்ணை அகல விரித்துப் பார்த்திருக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி மலேசிய இணைய மையத்தில் இருக்கும் கணினிகளில் தனது வீடியோ கேம்மை மேலும் மேம்படுத்துவதற்கான மென்பொருள் இல்லாததால் யாராவது 350 ரிங்கிட்டுக்கு கணினி விற்கிறார்களா என்று தாக்கிப் பேஸ்புக்கில் பதிவொன்றை பதிவு செய்திருந்தார்.

அந்தப் பதிவைப் பார்த்து சிலர் அவருக்கு புதிய கணினியை வாங்கித் தர முன்வந்துள்ளனர். மேலும், செய்தி அறிந்து தாக்கிப்பை நேரடியாகச் சென்று பேட்டியெடுத்த அன்பர்கள் அதனை சமூக ஊடகங்களில் பகிரவும் தாக்கிப் தற்போது பிரபலமாகி வருகிறார்.

அதைப் பார் சைட் சாடிக் தாக்கிப்பை சந்திக்க வேண்டுமென தமது டிவிட்டர் பக்கத்தில் பதிட்டிருந்தார். அது தொடர்பில் அமைச்சுத் தரப்பினர் தாக்கிப்பை தொடர்பு கொண்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker