Latestமலேசியா

நஜிப்பின் புகைப்படம்: அமைச்சர் தெராஸாவுக்கு வலைவாசிகள் கண்டனம்!

கோலாலம்பூர், அக்.19- நாட்டின் 11-ஆவது மலேசிய திட்டத்தின் இடைக்கால ஆய்வு குறித்து பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மக்களவையில் பேசிக் கொண்டிருந்த போது, முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பை ‘கண்காணித்து’ கைத்தொலைபேசியில் படம் பிடித்து வெளியிட்ட அமைச்சர் தெரேஸா கோக்கை சமூக வலைத்தள வாசிகள் சாடியுள்ளனர்.

“எப்போதும் நாடாளுமன்றத்தில் பிரதமர் பேசும் போது, நஜிப், பிரதமர் மகாதீரின் முகத்தை நேரில் பார்க்க மாட்டார். இன்றும் பிரதமரின் பேச்சின் போது, நான் நஜிப்பின் அத்தகைய இரு புகைப்படங்களை எடுத்துபதிவு செய்தேன்” என்று கூறி, தெரேஸா கோக் அந்தப் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.

அப்புகைப் படங்களை தெரேஸா பதிவு செய்ததை தொடர்ந்து, நாட்டிற்கு தேவையான பல முக்கிய விஷயங்கள் உள்ளன. நீங்கள் (தெரேஸா) முதலில் அவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக வலைத்தளவாசிகள் அவரை சாடினர்.

“மதிப்பிற்குரிய அமைச்சரே, நீங்கள் இப்போது எதிர்க்கட்சியில் இல்லை. அனைத்தையும் அரசியலாக்குவதை நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பதவியேற்ற 100 நாட்களில், மூலப் பொருள் தொழில்துறைக்கு என்ன மாற்றத்தை கொண்டு வந்தீர்கள்? அதற்கு முதலில் பதில் கூறுங்கள்” என்று திருச்செல்வம் என்ற சமூக வலைத்தளவாசி கேட்டுக் கொண்டார்.

“நீங்கள் நஜிப்பின் ஆர்வலர் என்று நான் கருதுகிறேன். பிரதமரின் பேச்சில் கவனம் செலுத்தாமல், உங்களின் கவனம் முழுவதும் நஜிப்பின் மீது திரும்பி உள்ளது. கைத்தொலைபேசியில் காலத்தை கழிக்காமல், வேலையை பாருங்கள்” என்று யாட் மெய் லாய் என்ற சமூக வலைத்தளவாசி தெரேஸாவை கடிந்துக் கொண்டார்.

“சிறுபிள்ளை போல் இந்த அமைச்சர் நடந்துக் கொள்கிறார்” என்று நிஸாம் பி. முகமட் ஹரீரியும், “நாட்டிற்கு தேவையான விஷயங்கள் கவனம் செலுத்துங்கள்” என்று இங் ஸியாவ் வேய் ஆகிய சமூக வலைத்தளவாசிகள் அறிவுறுத்தினர்.

இருந்த போதிலும், சிலர் தெராஸா கோக்கிற்கு ஆதரவு குரல்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

“அதிக நேரம் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருந்தால், அனைவருக்கும் ஒருவித அலுப்பு ஏற்படும். அந்த நேரத்தில் தான் தெரேஸா கோக் அந்தப் புகைப் படங்களை பதிவு செய்துள்ளார்” என்று முகமட் ஃபாமி எஹ்சான் கூறினார்.

“நாடாளுமன்றத்தில் சில நா.உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் பேச்சுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அது குறித்து யாரும் குரல் எழுப்பவில்லை. புகைப்படத்தை பகிர்வது பெரிய குற்றம் போல் சிலர் இங்கு குரல் எழுப்பி வருகின்றனர்” என்று போன் லுவா என்ற சமூக வலைத்தளவாசி தெரேஸாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker