Latestமலேசியா

உப்பில் பிளாஸ்டிக் துகள்களா? அதிர்ச்சித் தகவல்!

கோலாலம்பூர்,அக்.22- கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளைப் பற்றியும், அவை கடல் உயிரினங்களைப் பாதிப்பது பற்றியும், சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றியும் நாம் தொடர்ந்து நிறைய அறிகிறோம். ஆனால், மனிதர்களின் பொறுப்பற்ற பயன்பாட்டால் இந்தப் பிளாஸ்டிக் கழிவுகள் கடல் உயிர்களை மட்டும் பாதிப்பதில்லை. மாறாக, அது கடலிலிருந்து பெறப்படும் உப்பு வழியாக மீண்டும் நம் உடலுக்குள்ளேயே வந்து சேர்கிறது என்ற அதிர்ச்சியளிக்கும் ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளன.

அனைத்துலக சுற்றுச்சூழல் அமைப்பான, ‘க்ரீன்பீஸ்’ அமைப்பும் கிழக்காசியாவின், இஞ்சியான் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிம் ஸியூன் க்யூ என்பவரும் இணைந்து ஓர் ஆய்வை மேற்கொண்டுள்ளனர். 21 நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 39 பிரபல ப்ராண்ட் உப்பு மாதிரிகளைக் கொண்டு சமீபத்தில் நடத்தப்பட்டுள்ள இந்த ஆய்வின் முடிவில், 90 விழுக்காட்டு உப்பில் மைக்ரோ பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலந்துள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த 21 நாடுகளில் மலேசியாவும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளாஸ்டிக் மக்குவதற்கு 100 ஆண்டுகள் ஆகும். ஆனால், அவை சிதைந்து 5 மில்லிமீட்டருக்கும் குறைவான அளவில் இருக்கும் எனில் மைக்ரோ பிளாஸ்டிக் என்று அழைக்கப்படுகின்றன. இவை கடல் உயிரிகளுக்குள்ளும், கடலிலிருந்து பெறப்படும் உப்பிலும் கலந்து மீண்டும் நம் உணவுச் சங்கிலியில் கலந்துவிடுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், தற்போது உப்பில் கலந்திருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் குறித்த ஆய்வு முடிவுகள் அச்சத்தை ஏற்படுத்துவதாக சுற்றுச்சூழல் வல்லுநரள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்ட உப்புகளின் ப்ராண்ட்டின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. எனினும் மூன்று உப்புகள் இந்தக் கலப்படம் அல்லாமல் இருப்பதாகவும், அவை சீனா, தைவான் , பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த சில கடல், பாறை உப்புகள் எனவும் அறிவித்திருக்கிறது.

உலகிலேயே அதிகபட்சமாக ஆசியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட உப்பில்தான் நிறைய கலப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. அதிலும் மிக அதிக அளவு இந்தோனேசியா உப்புகள் கலப்பாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker