Latestஉலகம்

பத்திரிகையாளர் கஷோக்கியை துண்டு துண்டாக வெட்டி வீசிய சவுதிக் குழு!

இஸ்தான்புல், அக்.23- சவுதி அரேபிய ஆட்சி குறித்தும் அந்நாட்டு இளவரசர் குறித்தும் கடுமையாக விமர்சித்து வந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியை சவுதி அதிகாரிகள் துண்டாக வெட்டி காட்டுக்குள் வீசி விட்டனர் என்ற தகவல் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்துக்குள் வைத்து பிரபல பத்திரிகையாளரான சவுதியைச் சேர்ந்த ஜமால் கஷோக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகளுக்கு செய்தியாளராகப் பணியாற்றியவர் ஜமால் கஷோக்கி.

இவர் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது கொலை குறித்து சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சவுதி அரசையும், இளவரசர் முகமது பின் சல்மானையும் தொடர்ந்து விமர்சித்து எழுதி வந்த ஜமாலை தீர்த்துக் கட்ட சவுதி அரசு திட்டமிட்டு இயங்கியுள்ளது.

துருக்கி நாட்டை சேர்ந்த பெண்ணுடன் ஜமாலுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. ஹெயிஸ் செங்குர் என்ற அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய ஜமால் முடிவு செய்து அமெரிக்காவில் இருந்து துருக்கிக்கு சென்றுள்ளார்.

ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதால் அது தொடர்பான ஆவணங்களைப் பெறுவதற்காக கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்துக்கு அவர் சென்றுள்ளார்.

இவரை மீண்டும் அக் 2 ஆம் தேதி தூதரகத்துக்கு வருமாறு கூறி அனுப்பியுள்ளனர். அதே போன்று அக்டோபர் 2ஆம் தேதி சவுதி தூதரகத்துக்குள் சென்றவர் மீண்டும் திரும்பவே இல்லை.

இஸ்தான்புல் நகரில் உள்ளேயே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரைக் கொல்வதற்காக ரியாத்திலிருந்து 15 பேர் கொண்ட சிறப்புக் குழு இஸ்தான்புல்லுக்கு சென்றுள்ளது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் வெளிநாடுகளுக்கு செல்லுப் போது பாதுகாப்புக்க்காக செல்பவர்கள் தான் இந்த சிறப்பு குழுவினர்.

ஜமாலை சித்ரவதைச் செய்து கொன்ற பின்னர் உடற்கூறு ஆய்வு நிபுணரான சலா, அவரின் உடலை பல பகுதிகளாக வெட்டியுள்ளார். பின்னர் உடல் பாகங்களை சூட்கேஸில் வைத்து அடைத்து காரில் கொண்டு சென்று காட்டுப் பகுதியில் வீசியுள்ளனர்.

தற்போது வெளியாகியுள்ள இந்தத் தகவல் உலக நாடுகள் மத்தியில் அரசியல் ரீதியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சவுதியை அமெரிக்கா எச்சரித்துள்ளது. காட்டுக்குள் வீசப்பட்ட ஜமாலில் உடல் பாகங்களை துருக்கி போலிசார் தேடி வருகின்றனர்.

இந்தப் படுகொலைக்கு பல மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் ஜெர்மனி அரசாங்கம் உடனடி நடவடிக்கையில் இறங்கியது.

இது குறித்து பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் கூறிய போது இந்தப் படுகொலை தொடர்பில் சவுதி அரசு விளக்கம் அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் தற்போது இருக்கும் சூழ்நிலையில் சவுதி அரசாங்கத்துக்கு சப்ளை செய்யப்படும் ஆயுதங்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றுக்கு அடுத்த படியாக சவுதிக்கு அதிக ஆயுதங்களை சப்ளை செய்வதில் ஜெர்மனி 4ஆவது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker