Latestசினிமா

‘இயக்குனர் சுசி. கணேசனிடம் நான் பட்டபாடு’- நடிகை அமலா பால்

சென்னை, அக். 24- திரைப்பட இயக்குனர் சுசி கணேசனிடம் நானும் பல சங்கடங்களை அனுபவித்து இருக்கிறேன் என்று நடிகை அமலாபால் தெரிவித்தார்.

நடிகை அமலாபால் இயக்குனர் சுசி கணேசன் குறித்தும் அவர் மீதான துணை இயக்குனர் லீனா மணிமேகலையின் பாலியல் குற்றச்சாட்டு குறித்தும் ஓர் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அந்த அறிக்கையில், இயக்குனர் சுசி கணேசன் மீதான லீனா மணிமேகலையின் குற்றச்சாட்டை நான் ஆதரிக்கிறேன். பெண்ணியத்துக்கு சிறிதளவும் மரியாதை தரத் தெரியாத ஒரு மனிதரிடம் துணை இயக்குனராக அந்தப் பெண் என்ன பாடு பட்டு இருப்பார் என்பது எனக்குப் புரிகிறது.

சுசி கணேசன் இயக்கிய ‘திருட்டுப் பயலே -2’ படத்தின் நாயகியாக நான் இருந்தாலும் அவரின் இரட்டை அர்த்தம் தொனித்த பேச்சு, முகம் தெரியாத யாருக்கோ அவர் கூறும் பரிந்துரைகள், காரணம் இல்லாமல் உடலை ஒட்டி உரசும் மனப்போக்கு எனப் பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்து இருக்கிறேன்.

இதை வைத்தே லீனா மணிமேகலை என்ன பாடுபட்டு இருப்பார் என்பதை நான் உணர்கிறேன். இந்தக் கொடுமையை சமூக வலைத்தளங்கள் மூலம் அவர் வெளியில் சொல்லி இருப்பதற்கு அவரைப் பாராட்டுகிறேன்.

இன்றைய பொருளாதார நிலையும் பெருகி வரும் வேலைக்கென்று வரும் பெண்களின் தொகையும் பெண்களை எளிய இரையாக்கி விடுகிறது.

அங்கிங்கு அனைத்துத் தொழில்களிலும் துறைகளிலும் இந்தக் கொடுமை நடந்து வருகிறது. தங்களது மனைவியையும் மகள்களையும் போற்றிக் காப்பாற்றும் இதே ஆண்கள், வெளியே மற்ற பெண்களிடம் தங்களது ஆதிக்க மனப்பான்மையை செலுத்துவது துரதிஷ்டமானது.

ஆன்மிகத் துறைகளிலும் கலைத்துறைகளிலும் இருந்து பல உண்மைகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. இதே போல் மற்ற துறைகளிலும் இருந்தும் மீ-டூ குறித்த பதிவுகள் வெளி வரவேண்டும்.

அரசாங்கமும் நீதித்துறையும் எதிர்காலத்தில் இவ்விதத் கொடுமைகள் நடக்காமல் இருக்க வேண்டி பெண்களுக்குத் தொழில் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை சட்ட ரீதியாக அமல்படுத்த வேண்டும். சிலருக்கு இத்தகைய மீ-டூ எச்சரிக்கை மணி அமைகிறது என்று தெரிவித்துள்ளார் அமலா பால்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker