உலகம்

பிரபுவின் உருயிரை காக்க கடைசி நேர முயற்சி: சிங்கை அதிபரிடம் தாயார் சுகுணா மனு!

கோலாலம்பூர், அக்.25- போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் பிரபு பத்மநாதன் சிங்கப்பூரில் நாளை தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள நிலையில் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு அந்நாட்டு அதிபரிடம் இன்று மனு சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.

சுமார் 31 வயதுடைய பிரபு பத்மநாதன் என்ற மலேசிய இளைஞருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

அவருக்கான தூக்குத் தண்டனை நாளை நிறைவேற்றபடவுள்ள வேளையில், அந்தத் தண்டனை நிறுத்தி வைக்கப் பட வேண்டும் என்றும் அவருக்கு கருணை காட்டப் பட வேண்டும் என்று அவரின் தாயார் கே.சுகுணா மற்றும் சகோதரி மனு சமர்ப்பித்துள்ளனர்.

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் மாளிகையில் இந்த மனுவை அவர்கள் சமர்ப்பித்தனர். அந்த மனுவில், பிரபுவின் தந்தை பத்மநாதன், அவரின் 5 உடன் பிறப்புகள் கையெழுத்து போட்டுள்ளனர் என்று அவரின் வழக்கறிஞரான என்.சுரேந்திரன் தெரிவித்தார்.

“பிரபு தூக்கிலிடப் படக் கூடாது என்ற எண்ணத்தில் அந்த மனுவை சிங்கப்பூர் அதிபரிடம் சமர்ப்பித்து உள்ளோம்” என்று அவர் சொன்னார்.

நாளை சாங்கி சிறைச்சாலையில் பிரபு தூக்கிலிடப் படுவார். அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று மலேசிய அரசாங்கம் சிங்கப்பூர் அரசாங்கத்தை கேட்டுக் கொள்ளவிருப்பதாக நேற்று அறிவிப்பு செய்தது.

பிரபுவிற்கு கருணை வழங்கப்பட வேண்டும் என்று முயற்சிக்கும் மலேசிய அரசாங்கத்தின் செயலை தாங்கள் பாராட்டுவதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துக் கொண்டனர்.

கடந்த 2014-ஆம் ஆண்டு, ஜொகூர் பாலம் வாயிலாக போதைப் பொருளைக் கடத்திச் சென்றதாக பிரபு மீது குற்றஞ்சாட்டப் பட்டு, நீதிமன்றத்தில் அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டது.

அந்தப் போதைப் பொருள், வேறு ஓர் ஆடவருக்கு சொந்தமான காரில் இருந்து கண்டு பிடிக்கப் பட்டதாகவும், வற்புறுத்தலின் பேரில் தான் பிரபு அக்குற்றத்தை ஒப்புக் கொண்டார் என்றும் சுரேந்திரன் சுட்டிக் காட்டினார்.

பிரபுவிற்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப் படக் கூடாது என்று அம்னெஸ்டி இன்டெர்நேஷனல் என்ற மனித உரிமை அமைப்பும் குரல் கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

மலேசியாவை போன்று, சிங்கப்பூரும் தூக்குத் தண்டனை சட்டத்தை அகற்ற வேண்டும் என்று அந்த அமைப்பின் சிங்கப்பூர் பொறுப்பாளர் ரேஷல் சோ ஹாவர்ட் வலியுறுத்தினார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker