Latestமலேசியா

ஆஸ்ட்ரோ ‘சூப்பர் ஸ்டார்’ போட்டி: வாகைசூடினார் அன்பழகன்! ரிம. 50,000 பரிசை வென்றார்!

கோலாலம்பூர், அக்.27- ஆஸ்ட்ரோவின் சூப்பர் ஸ்டார் போட்டியில் பாடகர் அன்பழகன் வாகை சூடி, ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பெருமையைத் பெற்றார். அவர் 50,000 ரிங்கிட் ரொக்கம் மற்றும் வெற்றிக் கோப்பை தட்டிச் சென்றார். 2ஆவது இடத்தை பிடித்த பிரசாத் 25,000 ரிங்கிட் ரொக்கப்  பரிசைப்பெற்றார்.

முதல் சுற்று சூப்பர் ஸ்டார் போட்டியில் பங்கேற்ற பிரசாத், அன்பழகன், கயிலைநாதர், அமீர் மற்றும் வினோத் ஆகிய ஐவரில் இருந்து நால்வர் புள்ளிகள் அடிப்படையில் 2ஆவது சுற்றுக்குத் தேர்வு பெற்றனர்.

அதிகப் புள்ளிகளுடன் கயிலை நாதர் முதலிடத்தைப் பிடித்தார். அடுத்து வினோத் 2ஆவது இடத்தையும் அன்பழகன் 3ஆவதுஇடத்தையும் பிரசாத் 4ஆவது இடத்தையும் பிடித்தனர். 5ஆவதுபோட்டியாளர் அமீர் போட்டியிலிருந்து வெளியேறினார்.

2ஆவது சுற்று ‘ஒத்தைக்கு ஒத்தை’ என்ற நேருக்கு நேர் மோதல் என்ற அடிப்படையில் நடத்தப்பட்டது. அந்த வகையில் தனது போட்டியாளர் யார் என்பதைத் தேர்ந்தெடுக்கக்கூடிய ஒரு வாய்ப்பு அதிகப் புள்ளிகளைப் பெற்று வென்ற கயிலை நாதருக்கு வழங்கப்பட்டது.

தனது போட்டியாளராக பிரசாத்தை கயிலைநாதர் தேர்வு செய்து அவருடன் மோதினார்.இந்த 2ஆவது சுற்றின் முடிவில் அதிகப் புள்ளிகளைப் பெற்று கயிலை நாதரை வென்று இறுதிச் சுற்றுக்கு பிரசாத் தேர்வு பெற்றார்.

அடுத்து அன்பழகனும் வினோத்தும் இந்த ‘ஒத்தைக்கு ஒத்தை’ சுற்றில் மோதினர். இந்தச் சுற்றில் அன்பழகன் வென்று இறுதிச் சுற்றுக்குள் காலடி வைத்தார்.

சூப்பர் சிங்கர் மாபெரும் இறுதிச் சுற்றில் பிரசாத்தும் அன்பழகனும் மோதினர். இறுதிப் போட்டியில் நடுவர்களின் அதிகப் புள்ளிகளைப் பெற்று அன்பழகன் சூப்பர் ஸ்டார் என்ற பெருமையை தட்டிச் சென்றார்.

இப்போட்டியில் பங்கேற்ற அமீர், வினோத் மற்றும் கயிலைநாதர் ஆகிய மூவரும் ஆறுதல் பரிசுகளாக தலா 15,000 ரிங்கிட் பெற்றனர். இதில் Most Popular award விருதுக்கான ரசிகர்களின் ஆதரவை அன்பழகன் வென்று 10,000 ரிங்கிட் பரிசைப் பெற்றார்.

ஜேம்ஸ் வசந்தன், ரேணுகா மற்றும் ரம்யா ஆகியோர் நடுவர்களாக இருந்தர். இந்நிகழ்வில் சிறப்புப் பிரபலமாக இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரசாத் பங்கேற்றார்.

இந்த நிகழ்வின் போது சாதனையாளர்களுக்கான விருதினை ஆஸ்ட்ரோ அறுவருக்கு வழங்கி கௌரவித்தது. பதிப்பாளரும் கல்வியாளருமான டத்தோ சோதிநாதன், பத்திரிகையாளர் பாலன் மோசஸ், பாடகர் பென் நாதன், பத்திரிகையாளரும் எழுத்தாளருமான எம்.துரைராஜ் மற்றும் கலைஞர் அச்சப்பன் ஆகிய ஐவருக்கு சாதனையாளர்களுக்கான விருதுகளுடன் தலா 5,000 ரொக்கம் வழங்கியது. இந்த விருதினை ஆஸ்ட்ரோ இந்திய நிகழ்ச்சிகளின் குழுமத் தலைவர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து
எடுத்து வழங்கினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker