Latestமலேசியா

புதிய வீட்டு உடமையாளர் திட்டம்: -மிகச் சிறந்தது என்கிறார் மகாதீர்!

கோலாலம்பூர், நவ.5- இன்னும் 10 ஆண்டுகளுக்குள், மலேசியாவில் 1 மில்லியன் வீடுகள் கட்டப் படும் என்ற பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் வாக்குறுதி, FundMyHome.com என்ற புதிய அரசாங்கத் திட்டத்தின் வாயிலாக நிச்சயமாக நிறைவேற்றப் படும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர்  கூறினார்.

ரிம.500,000க்கு குறைவாக விற்பனை செய்யப் படும் வீடுகளை முதல் முறையாக வாங்க முயற்சிக்கும் மலேசியர்கள், அந்த வீட்டின் முழு தொகையில், 20 விழுக்காடு தொகையை செலுத்தினால் போதும் என்று அத்திட்டத்தில் கூறப் பட்டுள்ளது.

அதன் மிச்ச தொகையை, முதலீட்டாளர்கள், (பி2பி) என்ற நிதி கட்டமைப்பின் வாயிலாக செலுத்த வேண்டும். இதன் வாயிலாக, வீட்டு உடமையாளர்களுக்கான மாதத் தவணைக்கான தொகை குறையும்., அந்தத் தொகையையும், வீட்டு உரிமையாளர்கள், தங்களின் சேமிப்பு, கடன் அல்லது இ.பி.எஃப் நிதியிலிருந்து செலுத்தி முடித்து விடலாம் என்று மகாதீர் சொன்னார்.

“இவ்வாறு செய்வதன் வாயிலாக, முதலீட்டாளர்கள் அந்த வீடுகள் மீது உரிமை கொண்டாடலாம் என்று யாரும் திகைக்க வேண்டாம். அந்த வீடுகள், வீடுகளை வாங்குபவருக்கே சொந்தமாகும்” என்று அவர் விளக்கினார்.

முதல் முறையாக வீடுகளை வாங்குபவர்களுக்கு உதவிச் செய்யும் வகையில் அமைந்துள்ள அந்த ‘புதிய வீடு உரிமையாளர்கள் திட்டம்’ அடுத்தாண்டு காலாண்டில் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

பி2பி என்ற அந்த நிதி கட்டமைப்பை கட்டுப் படுத்தும் பணியில், செக்யூரிட்டி கமிஷன் ஈடுபடவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழ்நிலையில், நாட்டில் பல வீடுகள் கட்டப் பட்ட நிலையில், விற்பனை செய்யப் படாமல் இருக்கின்றன என்று பிரதமர் மகாதீர் சுட்டிக் காட்டினார்.

“அதே வேளையில், சொந்த வீடுகளை வாங்க முடியாமல் சூழ்நிலையில் பலர் உள்ளனர். இந்தப் புதிய திட்டம், அவர்கள் அனைவருக்கும் உதவியாக அமையும்” என்று மகாதீர் சொன்னார். அந்தப் புதிய திட்டம், மிகச் சிறந்த திட்டம் என்றும் அவர் வர்ணனை செய்தார். அத்திட்டத்தின் வாயிலாக, விற்கப் படாத வீடுகளில் சில, விற்பனை செய்யப் படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker