Latestமலேசியா

மலேசியாவில் கொத்தடிமை; வீடியோவில் கதறும் 48 தமிழக தொழிலாளர்கள்! -போலீஸ் விசாரிக்குமா? -(VIDEO)

சுங்கைப்பட்டாணி, நவ. 5- தமிழகத்திலிருந்து இங்கு வேலைக்காக கொண்டு வரப்பட்டு, கடந்த 4 மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டு, மிரட்டி வேலை வாங்கப்பட்டதோடு சம்பளமும் கொடுக்கப்படாத நிலையில் உயிருக்கே ஆபத்தான சூழலில் வாழும் தங்களைக் காப்பாற்றும்படி தமிழகத் தொழிலாளர்கள் மன்றாடும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் காட்டுத் தீயாய் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த காணொளியைக் காண நேர்ந்ததை தொடர்ந்து அமைச்சர் செனட்டர் வேதமூர்த்தியின் கோரிக்கைக்கு ஏற்ப அவருடைய அரசியல் செயலாளர் முனியாண்டி பொன்னுசாமி இது குறித்து புலன் விசாரணை நடத்தும்படி இன்று சுங்கைப் பட்டாணியில் போலீஸ் புகார் ஒன்றைச் செய்துள்ளார்.

அந்தக் காணொளியைப் பார்த்ததில் இருந்து, இது சட்ட விரோதமாக ஆட்களை அடைத்து வைக்கும் செயலாக இருக்கும் என்று தாம் கருதுவதாக அந்தப் புகாரில் முனியாண்டி தெரிவித்துள்ளார்.

இத்தகைய செயல், குற்றவியல் சட்டத்தின் 339 ஆவது மற்றும் 340 ஆவது ஆகிய பிரிவுகளின் கீழும், 2017ஆம் ஆண்டின் ஆள்கடத்தல் மற்றும் குடியேற்ற தொழிலாளர்களைக் கடத்துதல் ஆகியவற்றுக்கு எதிரான 13 அல்லது 15 ஆவது பிரிவின் கீழும் சட்ட விரோதமானதாக அமையலாம் என்று அவர் புகாரில் சுட்டிக் காட்டியுள்ளார்.

பகாங், பெந்தோங்கிலுள்ள காட்டுப் பகுதியில் நம்பப்படும் இடத்தில் இந்த  48 தமிழகத் தொழிலாளர்களையும் கட்டாயப் படுத்தி வேலை வாங்கப் பட்டிருப்பதாகவும் சம்பளமே தரப்படவில்லை என்றும் அந்தக் காணொளித் தகவலில் தெரிய வந்துள்ளது.

தங்களை இந்தக் கொடுமையில் இருந்து காப்பாற்றுமாறு அவர்கள் மன்றாடியுள்ளனர். வேலை தருவதாக அழைத்து வந்து இங்கு அவர்கள் கொத்தடிமைகளாக ஆக்கப் பட்டிருக்கின்றனர்.

இந்தக் காணொளியை எந்த வட்டாரத்தில் இருந்து வெளிவந்தது என்பதை கண்டறிய முடியவில்லை என்றாலும் அது மலேசியாவிலும் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

இவ்விவகாரத்தில் மலேசியாவின் தோற்றத்திற்கு பாதிப்பு வரலாம் என்பதால் உடனடியாக போலீசார் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அந்தப் போலீஸ் புகாரில் அமைச்சர் வேத மூர்த்தியின் அரசியல் செயலாளர் முனியாண்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker