Latestமலேசியா

கொத்தடிமை: 48 தமிழகத் தொழிலாளர்கள் பத்துமலையில் தஞ்சம்! ‘முதலாளி’ கைது

கோலாலம்பூர், நவ. 7- பெந்தோங் பகுதியில் கொத்தடிமைகளாக, சம்பளமின்றி வேலை வாங்கப்பட்டதாக நம்பப்படும் 48 தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு பத்துமலையில் தற்காலிகமாக தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

இவர்களை கொத்தடிமைகளாக நடத்தியதாக நம்பப்படும் அவர்களின் முதலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்திலிருந்து இங்கு வேலைக்காக அழைத்து வரப்பட்டு, கடந்த 4 மாதங்களாக மிரட்டி வேலை வாங்கப்பட்டதோடு சம்பளமும் கொடுக்கப்படவில்லை என்றும் தங்களின் உயிருக்கே மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளதால் தங்களைக் காப்பாற்றும்படி தமிழகத் தொழிலாளர்கள் மன்றாடும் காணொளி ஒன்று, சில தினங்களுக்கு முன்னர் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தக் காணொளியைக் காண நேர்ந்ததை தொடர்ந்து அமைச்சர் செனட்டர் வேதமூர்த்தியின் கோரிக்கைக்கு ஏற்ப அவருடைய அரசியல் செயலாளர் முனியாண்டி பொன்னுசாமி இது குறித்து புலன் விசாரணை நடத்தும்படி சுங்கைப் பட்டாணியில் போலீஸ் புகார் ஒன்றைச் செய்துள்ளார்.

இந்நிலையில் அந்தத் தொழிலாளர்கள், வேலை செய்யாமல் ஓடிப் போய்விட்டார்கள் என்று சம்பந்தப்பட்ட முதலாளி தரப்பில் பெந்தோங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதன் பின்னர் நடவடிக்கையில் இறங்கிய போலீசார் சம்பந்தப்பட்ட முதலாளி என நம்பப்படும் நபரைக் கைது செய்துள்ளனர்.

இவ்விவகாரம் போலீசார் குறித்து தங்களுக்கு தகவல் தெரிவித்திருப்பதாக தொழிலாளர் இலாகாவின் அறிக்கை ஒன்று கூறியது.

பெந்தோங் போலீஸ் நிலையத்தில் தொழிலாளர்கள் வேலைக்கு வராமல் காணாமல் போய்விட்டார்கள் என்று முதலாளி புகார் செய்த போது அவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களை, சில தொண்டூழியர்கள், பெந்தோங்கில் இருந்து காப்பாற்றி பத்துமலை கோயிலில் தற்காலிகமாக தங்க வைத்துள்ளனர் என்று தொழிலாளர் இலாகா அறிக்கை கூறியது.

இவ்விவகாரம் குறித்து விசாரிக்க, போலீஸ், தொழிலாளர் கடத்தல் தடுப்பு மன்றம், மற்றும் குடிநுழைவுத் துறை ஆகியவற்றைச் சேர்ந்த 12 அதிகாரிகள் விசாரணைக் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

சம்பந்தப்பட்ட 48 தமிழகத் தொழிலாளர்களிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இந்தியத் தூதரக பிரதிநிதி மற்றும் சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி ஆகியோர் முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

மாதத்திற்கு 25,000 ரூபாய் சம்பளம் தருவதாக தொடக்கத்தில் தங்களுக்கு அந்த முதலாளி வாக்குறுதி அளித்ததாக தொழிலாளர்கள் கூறினர். முதல் மாதம் மட்டுமே சம்பளம் தரப்பட்டத்தாகவும் அதன் பின்னர் கடந்த சில மாதங்களாக சம்பளம் தரப்படவில்லை என்றும் 4 மாதங்களாக தாங்கள் அந்த முதலாளியிடம் வேலை செய்ததாகவும் அவர்கள் கூறினர்.

இவர்கள் பெந்தோங், கம்போங் சமாங்கில் மின்சாரக் கம்பிகள் நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker