Latestமலேசியா

பெட்ரோனாஸ் மதிப்புச் சரிவு! பக்காத்தான் அரசை ‘காய்ச்சி’ எடுக்கிறார் நஜிப்

கோலாலம்பூர், நவ.9- இதுவரை மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை நிறுவனத்தின் தரவரிசையில் ஸ்திரமான நிலையை கொண்டிருந்த பெட்ரோனாஸ் நிறுவனம், முதன் முறையாக எதிர்மறையான நிலையை கொண்டிருப்பதாக அந்நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, இந்த நிலையை ஏற்படுத்திய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் தனது முகநூல் வாயிலாக ‘பாராட்டுகளை’ தெரிவித்துக் கொண்டார்.

நாட்டின் பொருளாதாரத்தை கையாளுவது குறித்து எவ்வித திறனும் பக்காத்தான் அரசாங்கம் கொண்டிராததால், பெட்ரோனாஸ் நிறுவனத்திற்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்று நஜிப் கூறினார்.

வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பெட்ரோனாஸ் நிறுவனம் கூடுதல் ஈவுத் தொகையை செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் பட்டதாகவும், அதனால், அந்நிறுவனத்தின் நிலை சரிந்துள்ளதாக அவர் சொன்னார்.

“கடந்த வாரம் அறிவிக்கப் பட்ட பட்ஜெட் 2019-இல் ஏற்படுத்தப் பட்ட ‘அபார’ மாற்றங்கள் பெட்ரோனாஸ் நிறுவனத்திற்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ‘வாழ்த்துகள் பக்காத்தான் ஹராப்பான்’. பொருளாதாரத்தை பக்காத்தான் அரசாங்கத்தால், சரிவர செயல்படுத்த முடியாது என்பது இதன் வாயிலாக தெளிவாகியுள்ளது” என்று நஜிப் கிண்டலாக கூறியுள்ளார்.

மூடிஸ் நிறுவனத்தின் பட்டியலைத் தொடர்ந்து, மலேசியாவின் கடன் மதிப்பு (credit rating)பாதிக்கப் படலாம் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

“இப்போதைய சூழ்நிலையில், பெட்ரோல் விலை ஸ்திரமாக இருக்கிறது. இருந்த போதிலும், பெட்ரோனாஸ் நிறுவனத்தின் கண்ணோட்ட நிலை குறைந்துள்ளது. பெட்ரோல் மற்றும் கச்சா எண்ணெய் விலைகள் குறைந்தால், அந்நிறுவனத்தின் நிலை என்னவாகும்?” என்று நஜிப் கேள்வி எழுப்பினார்.

மீண்டும் ஒரு பெட்ரோல் அல்லது கச்சா எண்ணெய் நெருக்கடியை சந்திக்க அரசாங்கம் தயாராக இருக்கிறதா என்று அவர் வினவினார்.

எண்ணெய் அல்லது பெட்ரோல் வருவாயை சார்ந்திருக்கக் கூடாது என்ற அடிப்படையில், இதர உலக நாடுகள் பாணியை பின்பற்றி தேசிய முன்னணி அரசாங்கம் பின்பற்றியது. புதிய அரசாங்கம் பழைய பாணியை பின்பற்றுவதால், மேலும் பல பிரச்சனைகள் தலை தூக்கும் என்றும் நஜிப் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker