Latestமலேசியா

குறட்டைச் சப்தம்: குடும்பம் உடைகிறது! விவாகரத்துக்கு வினோத காரணங்கள்!

கோலாலம்பூர், நவ.13- தூக்கத்தில் குறட்டை விடுவது, பெண்கள் இரவு நேரங்களில் துணி துவைப்பது மற்றும் பெண்கள் தங்களின் தோழிகளுடன் சுற்றுலா பயணங்களை மேற்கொள்வது போன்றவை, விவாகரத்திற்கான வினோதக் காரணங்களாக மாறி வருகின்றன என்று மகளிர், குடும்பம் மற்றும் சமுதாய மேம்பாட்டு அமைச்சின் துணை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.

ஐந்து ஆண்டுகளுக்கு குறைவாக திருமணம் செய்துக் கொண்ட பலர், மேல் கூறப்பட்ட கூற்றுகளை தாங்கள் விவாகரத்து கோருவதற்கான காரணமாக அறிவித்துள்ளனர் என்று அவர் சொன்னார்.

“நானும் இரவு நேரங்களில் தான் துணிகளை துவைப்பேன். ஆனால், இதையும் விவாகரத்து ஒரு காரணமாக தெரிவிக்கின்றனர்” என்று அவர் சுட்டிக் காட்டினார்.

“அப்படியென்றால், நீங்கள் இரவு நேரங்களில் துணி துவைக்காதீர். சலவை நிலையங்களுக்குச் செல்லுங்கள்” என்று துணை சபாநாயகர் இஙா கோர் மிங் கேலியாக கூறினார்.

“பொதுவாக நாடாளுமன்ற விவாதங்கள் இரவு நேரங்களில் தானே முடிவடைகிறது” என்று ஹன்னா இயோ பதிலளித்தார்.

சில கணவன்மார்கள், தங்களின் மனைவிகள் கார்களில் உணவு உண்பதை விரும்புவதில்லை என்றும், அதனால் சில விவாகரத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

அற்பமான 23 காரணங்களுக்கான விவாகரத்துகள் அரங்கேறுகின்றன என்ற 2016-ஆம் ஆண்டு அறிக்கை குறித்து ஹன்னா அவ்வாறு விளக்கமளித்தார்.

“விவாகரத்து கோருவது என்பது மிகப் பெரிய விஷயம். ஆனால், அற்பக் காரணங்களுக்காக விவாகரத்துகள் கோரப் படுகின்றன என்பதை விவரிப்பதற்காக நான் இவற்றை சுட்டிக் காட்டினேன்” என்று ஹன்னா சொன்னார்.

“அதன் அடிப்படையில், திருமணமானவர்கள் தொடர்ந்து மகிழ்ச்சியாக தங்களின் இல்லற வாழ்க்கையில் சேர்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப அபிவிருத்தி வாரியம் வழங்கவிருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

அதே வேளையில், திருமணமானவர்கள் தங்களின் வாழ்க்கைச் செலவுகளை எவ்வாறு கட்டுப் படுத்துவது என்பது தொடர்பிலான பயிற்சிகளும் வழங்கப் படும் என்று அவர் சொன்னார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker