Latestமலேசியா

கிரேடல் CEO இறப்பதற்கு முன் நெருங்கிய உறவிடமிருந்து கொலை மிரட்டலா?

கோலாலம்பூர்,நவ.15- மறைந்த கிரேடல் நிறுவன தலைமைச் செயல்முறை அதிகாரி நஸ்ரின் ஹாசான் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன் அவருக்கு தொலைப்பேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

யார் என்றே தெரியாத நபர் ஒருவரிடம் இருந்து அந்த அழைப்பு வந்ததாக தெ மலேசியன் இண்சைட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அந்த மிரட்டலை அடுத்து அது குறித்து நஸ்ரின் போலீசில் புகாரும் செய்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிறகு போலீசார் அந்த தொலைப்பேசி அழைப்பு நஸ்ரினின் ஒரு நெருங்கிய உறவுக்காரரிடம் இருந்து வந்திருப்பதை கண்டறிந்தும் உள்ளனர்.

கடந்த ஜூன் 14-ஆம் தேதி தமது வீட்டுப் படுக்கை அறையில் 45 வயது நஸ்ரின் கைப்பேசி வெடித்ததன் காரணமாக கருகி உயிரிழந்தார். தடயவியல் சோதனையில் கண்டறியபட்ட சில தடயங்களை வைத்து நஸ்ரினின் மறைவு ஒரு விபத்தல்ல; திட்டமிட்டுச் செய்யப்பட்ட கொலை என போலீஸ் வகைப்படுத்தியது.

இப்படி நஸ்ரினின் மறைவில் மர்மங்கள் இருப்பது சந்தேகமாகவே இருந்து வந்த வேளை, நஸ்ரினின் உடலை தோண்டி எடுத்து மறு சவப்பரிசோதனை செய்யுமாறு அவரது சகோதரர் போலீசாரை கேட்டுக் கொண்டார். அதன்படி, அக்டோபர் 8-ஆம் தேதி நஸ்ரினின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு சவப்பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

அந்த சவப்பரிசோதனையின் முடிவு குறித்து முழு அறிக்கையை மலாயா பல்கலைக்கழ மருத்துவமனையின் நோயியல் வல்லுநர்கள் தயாரித்து வருகின்றனர்.

தொடக்கத்தில், நஸ்ரின் கொலை வழக்கு தொடர்பில் அவரது மனைவி, மனைவியின் முன்னாள் கணவர், இரு வளர்ப்பு மகன்கள், மைத்துனி, சகலை ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நஸ்ரினின் இந்தோனேசியப் பணியாளரை போலீசார் விசாரணைக்காக தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker