Latestமலேசியா

‘இனவாதி’ எனக் கூச்சல்: வேதமூர்த்தியை பேச விடாமல் அமளி செய்த எம்.பி.க்கள்

கோலாலம்பூர், நவ. 19- அனைத்து வகையான இனப் பாகுபாடுகளையும் ஒழிப்பது குறித்த அனைத்துலக சாசனமான ‘ஐசெர்ட்’ (ICERD) தொடர்பான கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தில் பதிலளிக்க முயன்ற அமைச்சர் வேத மூர்த்தியை பேசவிடாமல் கூச்சல் போட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த அமளி காரணமாக அவர் கேள்விகளுக்கு விளக்கம் சொல்ல முடியாமல் அமர்ந்தார். வேதமூர்த்திக்கு எதிராக ‘இனவாதி… இனவாதி…” என எதிர்க்கட்சி எம்பிகள் சிலர் கூச்சலிட்டனர்.

தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சரான வேதமூர்த்தி, ஐசெர்ட் விவகாரம் மீது பேச முனைந்த போது அமளி தொடங்கியது. 2019ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புக்களுடனும் ஐசெர்ட் சாசனம் தொடர்பில் கலந்து ஆலோசிக்கப்படும் என்று வேதமூர்த்தி சொன்னார்.

அப்போது குறுக்கிட்ட டத்தோஶ்ரீ ரீசால் மரிக்கான் நைனா ( தே.மு. கப்பாளா பத்தாஸ்) அரசியல் அமைப்புச் சட்டத்தின் 153 ஆவது ஷரத்தின் கீழ் உள்ள ஆட்சியாளர்கள் மற்றும் மலாய்க்காரர்களின் சிறப்புரிமையை முடிவுக்கு கொண்டு வரும் முன்னோடியாக ஐசெர்ட் சாசனத்தை அங்கீகரிப்பது அமையுமா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் 153 ஆவது ஷரத்தினை அகற்றுவதற்கான ஒரு கால நிர்ணயத்திற்கு ஐசெட் அங்கீகாரம் வழிவகுக்கும் என்று கூறி மக்களவையை வேதமூர்த்தி தவறாக வழிநடத்தி இருப்பதாகவும் ரீசால் மரிக்கான் குற்றஞ்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த வேதமூர்த்தி, 153ஆவது ஷரத்தினை அகற்றுவதற்கான கால வரையறை எதுவும் விதிக்கப்படவில்லை என்று கூறியதோடு ஒரு முன்னாள் வழக்கறிஞர் என்ற முறையில் இது தமது சொந்தக் கருத்து என்றும் குறிப்பிட்டார்.

இதனால் பல எதிர்க்கட்சி எம்பிகள் ஆவேசத்துடன் எழுந்து கூச்சலிட்டனர். ஓர் அமைச்சரின் கருத்து என்பது சொந்தக் கருத்தின் அடிப்படையில் இருக்கக்கூடாது என்று அவர்கள் எச்சரித்தனர்.

இதற்கு பதில் கூறிய வேதமூர்த்தி, “அப்படியானால், உங்களின் கேள்விக்கு பதில் வேண்டுமானால், கொஞ்சம் பொறுங்கள், இவ்விவகாரத்தில் அட்டர்னி ஜெனரல் அவருடைய கருத்தைச் சொல்வார். எனவே இப்போதைக்கு தொடர்ந்து என்னைப் பேச அனுமதியுங்கள்” என்று கோரிக்கை விடுத்தார்.

இதன் பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஐசெர்ட் விவகாரத்தில் வேதமூர்த்தியின் அறிக்கைகள் ஒரே சீராக இல்லை என்று டான்ஶ்ரீ நோ ஒமார் (தே.மு. தஞ்சோங் கராங்) குற்றஞ்சாட்டினார்.

“மக்களவைக்கு வெளியே ஒன்று பேசுகிறீர்கள், உள்ளே ஒன்று பேசுகிறீர்கள்’ என்று அவர் சாடினார். மலேசியாவில் இனப் பாகுபாடு கடைபிடிக்கப்படுவதாக முன்பு வேதமூர்த்தி கூறி வந்துள்ளார் என்றும் அவர் சொன்னார்.

மேலும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஹிண்ட்ராப்பின் தலைவராக இருந்த போது வேதமூர்த்தி பேசிய ஒரு காணொளி பரவலாகி வருவது குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார். அந்தக் காணொளியில், சிறுபான்மை இனத்திற்கு எதிராக குறிப்பாக, மலேசிய இந்தியர்களுக்கு எதிராக இனப் பாகுபாடு காட்டப் படுவதாக வேதமூர்த்தி கூறியிருப்பதை அவர் நோ ஒமார் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதில் சொன்ன வேதமூர்த்தி, இந்தியர்களுக்கு எதிராக இப்போது அத்தகைய இனப் பாகுபாடு இல்லை என்றும் தேசிய முன்னணி அரசாங்கத்தில் தான் இந்த இனப்பாகுபாடு நிலவியது என்றும் கூறினார்.

இந்த நேரத்தில் தேசிய முன்னணி மற்றும் பாஸ் கட்சி எம்பிகள் வேதமூர்த்தியை நோக்கி “இனவாதி .. இனவாதி” என்று கூச்சலிட்டு கோஷம் போட்டனர். இதனால் தொடர்ந்து பேச முடியாத நிலையில் வேதமூர்த்தி இருக்கையில் அமர்ந்தார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker