Latestமலேசியா

துணி உலர்த்தும் கம்பியால் தாக்கியதில் இறந்தே போனார் மனைவி; கணவர் போலீசில் சரண்!

ஜோர்ஜ் டவுன், நவ.20- கருத்துவேறுபாடு முற்றவும் கணவர் துணி உலர்த்த பயன்படுத்தப்படும் கம்பியால் தாக்கியதில் மனைவி உயிரிழந்தார்.

ஜாலான் ஆயர் இத்தாம், ஶ்ரீ இண்டா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அத்தம்பதி தங்கியிருந்த வாடகை வீட்டில் இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் நிகழ்ந்தது.

தனது 39 வயது மனைவி தி.சாந்தியை கொலை செய்துவிட்டதாக 42 வயதான அந்த கணவரே நேற்று மாலை 4.30 மணிக்கு போலீசில் சரண் அடைந்ததாக வடக்கிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர் சே ஸாமானி சே அவாங் தெரிவித்தார். உயிரிழந்த சாந்தி வீட்டிலேயே மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகள் நடத்தி வந்திருக்கிறார். மாறாக, அவரது கணவர் பள்ளி ஒன்றின் கட்டொழுங்கு ஆசிரியர் ஆவார்.

சாந்தியின் கணவர் தானாகவே வந்து சரண் அடைந்ததும் போலீசார் அவரை சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு கொண்டு சென்றபோது படுக்கை அறையில் சாந்தி ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறார்.

நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் தனக்கும் சாந்திக்கும் கருத்துவேறுபாடு காரணமாக வாக்கு வாதம் மூண்டது. அந்த சமயத்தில் கடும் கோபத்திற்கு ஆளானதால் சாந்தியை துணி உலர்த்தும் கம்பியால் தலையிலேயே அடித்து விட்டதாக அந்த கணவர் போலீசிடம் கூறி இருக்கிறார்.

சாந்தியை அடித்துவிட்டு கூலிம் உள்ள தனது வீட்டுக்குச் சென்று விட்டதாகவும், மறுநாள் காலை 11 மணிக்கு திரும்ப தனது வாடகை வீட்டுக்கு வந்து பார்த்தபோது சாந்தி சுயநினைவின்றி கிடந்ததாகவும் அவர் நடந்ததை போலீசாரிடம் விவரித்திருக்கிறார்.

மனைவி இறந்து விட்டதை உணர்ந்ததும் அவர் உறவினரிடம் தகவலைத் தெரிவித்திருக்கிறார். உறவினர்கள் போலீசிடம் புகார் செய்யுமாறு அறிவுறுத்தியதை அடுத்து அவர் போலீசில் சரண் அடைந்ததாக கூறப்படுகிறது.

திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிய அத்தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker