
புதுடில்லி ,நவ.20- தமிழக அரசின் கோரிக்கை ஏற்று இறக்குமதி மணல் தொடர்பான வழக்கை அடுத்த மாதம் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மலேசியாவில் இருந்து சுமார் 55 ஆயிரம் டன் மணலை ராமியா எண்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனம் இறக்குமதி செய்து தூத்துக்குடி துறைமுகத்தில் வைத்துள்ளது. இதனை பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல தமிழக அரசு தடை விதித்தது.
எனவே, தமிழக அரசே அந்த மணலை கொள்முதல் செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது தமிழக அரசு மணலை விலை கொடுத்து வாங்க ஒப்புதல் அளித்ததால், முழுத் தொகையையும் ஒரு வாரத்துக்குள் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கு கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி உச்ச நீதிம்ன்றத்தில் விசாரணைக்கு வந்த போது மலேசிய மணல் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் ரூ. 10 கோடியே 56 லட்சத்துக்கான வரைவோலை நீதிபதிகளிடம் தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள் தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள இறக்குமதி மணலை விற்பனைக்காக வெளியே எடுத்துச் செல்ல தமிழக அரசுக்கு தூத்துக்குடி துறைமுக நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த வேளையில் வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, எஸ். அப்துல் நசீர் ஆகியோரின் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை துவங்கியதும் தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி ஆஜராகி தங்கள் தரப்பில் விரிவான இறுதி வாதங்களை முன்வைக்க மேலும் சிறிது அவகாசம் தேவை என நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணையை அடுத்த மாதம் (டிசம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.