Latestமலேசியா

பெரும்பாலான நிலையங்களில் போலீஸ்காரர்கள் பற்றாக்குறை!

இஸ்கண்டார் புத்ரி, நவ.22- நாட்டிலுள்ள 791 காவல் நிலையங்களில், 500-க்கும் மேற்பட்ட, அதாவது 65 விழுக்காடு இடங்களில் போலீஸ்காரர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. சில காவல் நிலையங்களில் காவல் நிலையத் தலைவர்களே இல்லை.

பெரும்பாலான காவல் நிலையங்களில் 35 பேருக்கும் குறைவாக போலீஸ்காரர்கள் தான் உள்ளனர். சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்களில் 3-லிருந்து 4 பேர் வரை தான் வேலை செய்கின்றனர் என்று புக்கிட் அமான் மேலாண்மை துறை இயக்குநர் டத்தோஶ்ரீ அஸ்ரி யூசோப் கூறினார்.

இந்தப் பிரச்சனையைக் களைவதற்கு, கடந்த 2015-ஆம் ஆண்டில், கோலாலம்பூரின் தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் மற்றும் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில், நவீன போலீஸ் வழிகாட்டியை, தேசிய போலீஸ் படை வெளியிட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

“ஒவ்வொரு காவல் நிலையத்திலும், குறைந்தது 35 போலீஸ்காரர்கள் பணியில் அமர்த்தப் பட வேண்டும். காவல் நிலையங்களின் தலைவராக, குறைந்த பட்சம், துணை சூப்ரிண்டெண்ட்டாவது நியமிக்கப் பட வேண்டும் என்று அந்த நவீன போலீஸ் வழிகாட்டியில் வலியுறுத்தப் பட்டது.

“அந்தக் காவல் நிலையங்களின் மூன்று முக்கிய குறிக்கோளாக குற்றச்செயல் தடுப்பு முயற்சிகள் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில், இன்ஸ்பெக்டர்கள் பல காவல் நிலையங்களின் தலைவராக உள்ளனர். இதனால், அவர்களுக்கு அழுத்தம் அதிகமாகி உள்ளது” என்று அவர் சொன்னார்.

நாடு தழுவிய நிலையில், அனைத்து காவல் நிலையங்களும் முறையாக செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில், போலீஸ் படை அந்த நவீன போலீஸ் வழிகாட்டியை வெளியிட்டது என்று அஸ்ரி கூறினார்.

தற்போது நிலவி வரும் போலீஸ் பற்றாக்குறையை அறிந்து, அரசாங்கம் அதற்கு தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker