Latestமலேசியா

சீபில்ட் ஆலய இடமாற்றத்தை ஒத்தி வைக்க நாங்கள் சம்மதிக்கவே கிடையாது!- ஓன் சிட்டி

கோலாலம்பூர்,நவ.23- சில தரப்புக்கள் கூறுவது போல சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் இடமாற்ற நடவடிக்கையை ஒத்தி வைப்பதற்கு ஒருபோதும் தாங்கள் ஒப்புக்கொண்டதில்லை என ஆலய நிலத்தின் உரிமையாளரான மேம்பாட்டு நிறுவனம் ஓன் சிட்டி தெரிவித்துள்ளது.

“நாங்கள் ஆலயத்தை இட மாற்றும் நடவடிக்கையை தள்ளிப் போடுவதற்கு சம்மதம் தெரிவித்ததே கிடையாது. ஆனால், ஒரு சில தரப்புகளும், அரசியல்வாதிகளும் அவ்வாறு வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். பார்க்கப் போனால் நீதிமன்ற தீர்ப்பின்படி அவர்கள் நேற்றே நிலத்தைக் காலி செய்திருக்க வேண்டும்” என்று ஓன் சிட்டி நிறுவனத்தின் சட்ட இயக்குநர் கமால் எப்பெண்டி தெரிவித்தார்.

சீபீல்ட் ஆலய இட மாற்றத்தை நவம்பர் 29 வரை ஒத்தி வைக்க ஓன் சிட்டி நிறுவனம் இணக்கம் தெரிவித்ததாக அந்த ஆலயம் அதே இடத்தில் இருக்க வேண்டும் என போராட்டம் நடத்தி வரும் தரப்பினர் கூறியுள்ளனர். ஏனெனில், அத்தரப்பினர் தொடுத்துள்ள வழக்கின் தீர்ப்பு அன்றைய நாளில் தான் தெரியவரும் என்றும் ஆனால், தீர்ப்பு தெரியவரும் வரையில் ஆலய இடமாற்றத்தை ஒத்தி வைக்குமாறு நீதிமன்றம் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று கமால் மேலும் குறிப்பிட்டார்.

“2014-ஆம் ஆண்டிலேயே உயர்நீதிமன்றத்தில், ஓன் சிட்டி உட்பட சிலாங்கூர் அரசாங்கம், ஆலய நிர்வாகத்தை தக்க வைத்துக்கொள்ள எண்ணும் கே.செல்லப்பா மற்றும் எம்.நாகராஜு ஆகிய தரப்புகள் அனைவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தோம்.”

“மாறாக இடையில், செல்லப்பாவும் நாகராஜுவும் ஆலய நிர்வாகம் தொடர்பில் ஆளுக்கு ஆள் தனித்தனியே வழக்கு தொடுக்க அந்த வழக்கில் செல்லப்பா வென்றார்.”

“அந்த வெற்றியை அடுத்து, ஆலயத்தை வேறு இடத்திற்கு மாற்றவும், ஓன் சிட்டி 1.5 மில்லியன் ரிங்கிட் ஆலயத்திற்கு கொடுப்பதற்கும் அனைத்து தரப்பினரும் சம்மதித்தனர். ஆலயம் இடமாற்றம் செய்யப்படும் புதிய நிலத்தை வழிபாட்டு பகுதியாக சிலாங்கூர் அரசு ஆவணப்படுத்தும் எனவும் எல்லாவற்றுக்கும் இணக்கம் காணப்பட்டது” என கமால் முன்பு நடந்ததைப் பற்றி விவரித்தார்.

இப்படியாக தாங்கள் சட்டப்பூர்வமாக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து முடித்து விட்டதாகவும், அதனால் அனைத்து தரப்புக்களும் சட்டத்தை மதிக்க வேண்டும் எனவும் தாம் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.

சீபில்ட் ஆலய விவகாத்தில் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கி விட்ட போதிலும் இவ்விவகாரத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும் என்று அவ்வாலய பக்தர்கள் சிலரும், அரசு சாரா இயக்கங்களும், அரசியல் கட்சியும் சில வாரங்களாக நெருக்குதல் அளித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker