Latestமலேசியா

தாக்குதல் கும்பல் மீது தண்ணீர் பாய்ச்சாதது ஏன்? -போலீஸ் விளக்கம்!

சுபாங் ஜெயா, நவ.28- வழிப்பாட்டு தலங்களில் தண்ணீர் பீரங்கிகள் பயன்படுத்தக் கூடாது என்று நிலையான இயக்க நடைமுறை பயன்பாட்டில் உள்ளதால், சீபில்டு ஆலயம் முன்பு கலவரத்தில் ஈடுபட்டோர் மீது தண்ணீர் பாய்ச்சும் கலகத் தடுப்புமுறையைப் பயன்படுத்தப் படவில்லை என்று போலீஸ் படைத் தலைவர் கூறினார்.

“அது வழிபாட்டு தலமாகும். அங்கு தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தச் சொல்கிறீர்களா?” என்று டான்ஶ்ரீ முகமட் ஃபூஸி ஹரூண் கேள்வி எழுப்பினார்.

பிரச்சனைகளை கட்டுப்படுத்த ஏற்ற நடவடிக்கைகளைத் தான் போலீஸ் எடுத்துள்ளது என்று அவர் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். பிரச்சனைகளை கட்டுப்படுத்துவதற்காக தண்ணீர் பீரங்கிகளை இதற்கு முன்னர் போலீஸ் பயன்படுத்திய போது, அதனை எதிர்த்து பலர் கண்டனம் தெரிவித்தனர் என்பதையும் ஃபூஸி சுட்டிக் காட்டினார்.

“நாங்கள் பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருந்தோம். பிரச்சனைகளை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் சிலர் நடந்துக் கொள்வர் என்று நாங்கள் கணிக்கவில்லை. இருந்த போதிலும், நாங்கள் தற்போது அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கி வருகிறோம். அந்த ஆலயத்தில் பிரார்த்தனை செய்ய விரும்பும் பக்தர்களை நாங்கள் தடுக்க முடியாது” என்று அவர் சொன்னார்.

அந்த ஆலயத்தின் முன்பு கூடிய கும்பல் மீது ஏன் போலீசார் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தவில்லை என்று சில தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அச்சம்பவத்தில் கடுமையாக காயமடைந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமை தாம் சுபாங் மருத்துவமனைக்கு சென்று தாம் பார்த்து வந்ததாக அவர் தெரிவித்தார்.

கடமையை செய்த அந்தத் தீயணைப்பு வீரர் தாக்கப் பட்டது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகும். அந்தத் தீயணைப்பு வீரரை தாக்கி, ஒன் சிட்டி அலுவலகத்தை நாசப் படுத்திய கும்பல் மீது தேவையான நடவடிக்கையை போலீஸ் தரப்பு எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்த அவர், போலீஸ் அந்த இடத்தில் இல்லாத போது, அந்தக் கும்பல் அந்த நாச வேலையில் ஈடுபட்டதாக கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker