Latestமலேசியா

கொடூரக் குற்றங்கள்: மரணத்திற்கு பதிலாக ‘பரோல்’ இல்லாத வாழ்நாள் சிறை?

கோத்தா கினாபாலு, நவ. 29- மரணதண்டனை முறையை அகற்றுவதற்கு மாற்றாக, கொடூரமான குற்றங்களுக்கு ‘பரோல்’ அனுமதியே இல்லாத கட்டாய வாழ்நாள் சிறைத் தண்டனையை அமல்படுத்த அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கப் படவிருப்பதாக பிரதமர் துறை அமைச்சர் டத்தோ வி.கே.லியூ கூறினார்.

கடுமையான குற்றச்செயல்கள் காரணமாக பாதிக்கப்படும் குடும்பத்தினரின் உணர்வுகளையும் கருத்தில் கொண்டு இந்தப் பரிந்துரை செய்யப் படுவதாக அவர் சொன்னார்.

லண்டனிலுள்ள மலேசிய தூதரகத்தில் மரணதண்டனையை அகற்றுவது தொடர்பாக மலேசிய சட்டத்துறை மாணவர்களுடனான கலந்துரையாடல் நடத்தப்பட்டது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அமைச்சர் லியூ மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு மரணத்திற்கு தண்டனை மரணமாகத்தான் இருக்கவேண்டும் என்பது ஒருபோதும் தீர்வாக அமையாது. அதற்குப் பதிலாக ஒரு மனிதாபிமானம் கொண்ட சமுதாயமாக முன்னோக்கிச் செல்லவேண்டும். மரண தண்டனை விதிக்கப்படும் போது சில வேளையில் நீதி பிழைபட்டும் போய்விடலாம் என்றார் அவர்.

உதாரணமாக, 2017ஆம் ஆண்டில் போதைப்பொருள் கடத்தலுக்காக தென் கொரிய மாணவர் ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டு சிரம்பான் நீதிமன்றத்தில் மரண தண்டனையை எதிர்நோக்கி இருந்தார்.

அவர் மரணத்தை எதிர்நோக்கி இருந்த அந்தத் தருணத்தில், அந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் விசாரணையின் போது தான் பொய் சொன்னதாக பின்னர் ஒப்புக்கொண்டார்.

ஒருவேளை, அந்த அப்பாவிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தால் அதன் அர்த்தம், உண்மையான குற்றவாளி இன்னமும் தலைமறைவாக இருக்கிரான் எனப்து தானே என்று அமைச்சர் லியூ குறிப்பிட்டார்.

இம்மாதம் தொடக்கம் வரை, சிறைச்சாலைகளில் இருந்து வரும் 65,222 கைதிகளில் 1,281 கைதிகள் மரண தண்டனைக் கைதிகள் என்று அவர் சொன்னார்.

எட்டு வகையான சட்டங்களின் கீழ் 32 வகையான குற்றங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த மரணதண்டனையை அமைச்சரவை அகற்றுவது என முடிவு செய்துள்ளதாக கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி அரசாங்கம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker