Latestமலேசியா

கேமரன்மலையில் சிவராஜ்ஜின் வெற்றி செல்லாது; நீதிமன்றம் தீர்ப்பு!

கோலாலம்பூர், நவ.30- கடந்த 14-ஆவது பொதுத் தேர்தலில், கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ சி.சிவராஜ்ஜின் வெற்றி செல்லாது என்று தேர்தல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

அந்தத் தொகுதியில் தேர்தல் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன என்பது நிரூபணமாகி உள்ளதால், சிவராஜ்ஜின் வெற்றி செல்லாது. அதனைத் தொடர்ந்து, அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தின் (மேல்முறையீடு மற்றும் சிறப்பு அதிகாரங்களின்) நீதிபதி அஸிஸா நவாவி அறிவித்தார்.

அந்த வழக்கை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்த ஜசெக கட்சி வேட்பாளரான எம்.மனோகரன், அந்தப் பொதுத் தேர்தல் காலத்தில், அத்தொகுதியில் பண ஊழல்கள் நிகழ்த்தப்பட்டன என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளார் என்று நீதிபதி அஸிஸா சொன்னார்.

“அந்தத் தொகுதியில் ஊழல்கள் நிகழ்த்தப் பட்டுள்ளன என்பது குறித்த தகவல்களை தொகுதி வேட்பாளர் சி.சிவராஜ்ஜும் அறிந்துள்ளார் என்பது ஆதாரப்பூர்வமாக தெரிய வந்துள்ளது. அதனால், அவரின் வெற்றி செல்லத் தகாது என்று அறிவிக்கப் படுகிறது” என்று அஸிஸா விளக்கினார்.

கடந்த பொதுத் தேர்தல் கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் சி.சிவராஜ்ஜின் வெற்றியை எதிர்த்து எம்.மனோகரன் தேர்தல் வழக்கு மனுவை கடந்த ஜூன் 4-ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker