
கோலாலம்பூர், டிசம்.05- 1எம்டிபி பண மோசடியில் சம்பந்தப் பட்டு, தலைமறைவாகி வாழ்ந்து வரும் தொழிலதிபர் ஜோ லோவுக்கு எதிராக நீதிமன்றம் கைது ஆணையை பிறப்பித்துள்ள போதிலும், மலேசிய அதிகாரிகளிடம் சரணடைய அந்தத் தொழிலதிபர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு சட்டத் திட்டங்களை பின்பற்றாத பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் அமைச்சரவை, தங்களின் புதிய அரசாங்கத்தின் தோல்விகளை மறைப்பதற்காக, ஜோ லோவ்வை கைது செய்ய ஆணை பிறப்பித்துள்ளதாக லோவ்வின் பிரதிநிதி கூறியுள்ளார்.
“ஜோ லோவ் தாம் குற்றம் ஏதும் புரியவில்லை என்று தொடர்ந்து தெரிவித்து வருகிறார். அரசியல் அடிப்படையில், அவரின் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டு வருகின்றன. இங்கு அவருக்கு நியாயமான தீர்ப்பு வழங்கப் படும் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை” என்று ஜோ லோவ்வின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.