
ஜோர்ஜ் டவுன்,டிச.06- PTPTN உயர்கல்விக் கடனுதவியைத் திரும்பச் செலுத்தும் தொகையை சம்பந்தப்பட்ட தொழிலாளரின் அனுமதியின்றி சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்ய முதலாளிமார்களுக்கு உரிமை இல்லை என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் கூறினார்.
அவ்வாறு செய்வதற்கு நடப்பில் உள்ள சட்டத்தில் இடமில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
“ஆகையால், இதற்கு PTPTN சட்டம் முதலில் திருத்தப்பட வேண்டும். கடனை திரும்பிச் செலுத்தவில்லை என்றால் அந்தப் பணத்தை எந்தத் தரப்பிடமிருந்தும் பிடித்தம் செய்து கொள்ளலாம் என்று அந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட வேண்டும்” என்று ஜோர்ஜ் டவுனில் நடைபெற்ற 7–ஆவது வேலைச் சட்டக் கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னர் குலா செய்தியாளர்களிடம் பேசினார்.
அவ்வாறு சட்டம் இருப்பின் முதலாளிமார்கள் அதை பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்றார் அவர்.
அடுத்தாண்டு முதல், PTPTN கடனைப் பெற்றவர்களின் சம்பளத்தில் இருந்து முதலாளிமார்கள் ஒவ்வொரு மாதமும் PTPTN கழகம் நிர்ணயிக்கும் தொகையை வெட்டிக் கொள்வார்கள் என்று நேற்று அக்கழகத்தின் தலைவர் வான் சைப்பூல் வான் ஜாய் அறிவித்திருந்ததை அடுத்து அமைச்சர் குலா இவ்வாறு கருத்துரைத்தார்.