Latestமலேசியா

அடுத்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், பக்காத்தானில் ஊழல் இருக்கவே கூடாது!- பிரதமர்

புத்ராஜெயா, டிச.10- நாட்டின் 15-ஆவது பொதுத் தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க வேண்டுமென்றால், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் சுத்தமாகவும், ஊழல்களில் சம்பந்தப்படாமலும் இருக்க வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அறிவுறுத்தினார்.

கடந்த பொதுத் தேர்தலின்போது, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் சபாவின் வாரிசான் கட்சி உட்பட அனைத்து உறுப்பு கட்சிகளையும், ஊழலை எதிர்த்த பொதுமக்கள் தேர்ந்தெடுத்தனர் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

“ஏற்றுக் கொள்ள முடியாத தவறான காரியங்களில் ஈடுபடாதீர்கள். யாரிடமிருந்தும் லஞ்சம் வாங்காதீர். ஊழலை வாங்குவதோ அல்லது வழங்குவதோ சட்டப்படி குற்றமாகும்.

“தவறேதும் புரியாமல், லஞ்சக் குற்றச் செயல்களில் ஈடுபடாமல், நியாயமாக செயல் பட்டால், அடுத்த பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

“அடுத்த பொதுத் தேர்தலின் போது, நான் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை வழி நடத்தாமல் போனால் கூட, நாம் ‘சுத்தமாக’ செயல்பட்டால், மீண்டும் வெற்றி பெறும் வாய்ப்பு நமக்கு அதிகமாக இருக்கும்.

“ஆனால், லஞ்சக் குற்றச் செயல்களில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியினர் ஈடுபட்டால், அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப் பட்டாலும், வெற்றியை நோக்கி நடைபோடுவது சிரமமான காரியமாக அமையும்” என்று பக்காத்தான் ஹராப்பானின் நன்கொடை விருந்து நிகழ்வில் மகாதீர் கூறினார்.

பக்காத்தான் ஹராப்பானின் நன்கொடை விருந்தில் பங்களித்தவர்களுக்கு சிறப்பு சலுகைகள் ஏதும் வழங்கப் படாது என்று அவர் அந்நிகழ்வில் சுட்டிக் காட்டினார்.

“அரசாங்கம் தங்களுக்கு ஏதேனும் வகையில் உதவ வேண்டும் என்று நீங்கள் கருதினால், அதனை ‘தெண்டர்’ எனப்படும் ஒப்பந்த முறை வாயிலாக தான் நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்றார் அவர்.

“லஞ்சம் ஏதும் கொடுத்து அரசாங்கத்தின் உதவியை பெற நீங்கள் முயற்சித்தால், நீங்கள் சட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும்” என்று அவர் நினைவுறுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker