Latestமலேசியா

நஜிப்-அருள் கந்தா நாளை குற்றஞ்சாட்டப்படுவர்!- எம்ஏசிசி தகவல்

கோலாலம்பூர், டிச.11- 1எம்டிபி நிறுவனத்தின் கணக்கறிக்கையில் சட்ட விரோதமாக மாற்றங்களை நிகழ்த்தியதற்காக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் மற்றும் 1எம்டிபி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அருள் கந்தா ஆகிய இருவரும் நாளை குற்றஞ்சாட்டப்படுவர் என்று மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் கூறியது.

அவ்விருவரும், கோலாலம்பூரிலுள்ள வெவ்வேறு செஷன்ஸ் நீதிமன்றங்களில் குற்றஞ்சாட்டப்படுவர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்விவகாரம் தொடர்பில், எம்.ஏ.சி.சி அதிகாரிகள் நேற்று நஜிப்பை கைது செய்து, அதன் பின்னர், சில மணி நேரங்களில் அவரை ஜாமினில் விடுவித்தனர். அதேப் போன்று, இன்று அருள் கந்தாவை கைது செய்தனர்.

கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை, 1எம்டிபி நிறுவனத்தின் கணக்கறிக்கையில் நஜிப் மற்றும் அருள் கந்தா மாற்றங்களை செய்தனர் என்று ஆடிட்டர் ஜெனரல் மடினா முகமட் இரு வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

2014-ஆம் ஆண்டின் 1எம்டிபி நிறுவனத்தின் நிதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில பத்திகளை நீக்குமாறு நஜிப் உத்தரவிட்டிருப்பதாக மடினா குறிப்பிட்டார்.

கடந்த 2016-ஆம் ஆண்டின், பிப்ரவரி 24, 25 மற்றும் மார்ச் 1-ஆம் தேதிகளில் தேசிய கணக்காய்வுத் திணைக்களத்தின் 1எம்டிபி குழுவை நேரில் சந்தித்த அருள் கந்தா, தயாரிக்கப்பட்ட கணக்கறிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்துமாறு அக்குழுவை கேட்டுக் கொண்டார் என்றும் மடினா கூறியிருந்தார்.

2009-ஆம் ஆண்டின் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணைய சட்டத்தின் 23-ஆவது பிரிவின் கீழ், நஜிப் மற்றும் அருள் கந்தா குற்றஞ்சாட்டப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker