Latestமலேசியா

ஹோட்டல் வாங்கிய விவகாரம்: 10 ஊழல் குற்றச்சாட்டுகளை இசா மறுத்தார்!

கோலாலம்பூர்,டிச.14- பெல்டா முதலீட்டு நிறுவனம் மூலமாக சரவாக், கூச்சிங்கில் தங்கும் விடுதி ஒன்று வாங்கியது தொடர்பில் பெல்டாவின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ முகமட் இசா அப்துல் சமாட்டிற்கு எதிராக 10 ஊழல் குற்றச்சாட்டுகள் பாய்ந்துள்ளன.

அந்த 10 குற்றச்சாட்டுகளில் ஒன்று அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதை உட்படுத்தியது. எஞ்சிய 9 குற்றச்சாட்டுகள் 30 லட்சம் ரிங்கிட்டுக்கும் மேல் லஞ்சம் பெற்றது தொடர்பிலானவையாகும்.

இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இசாவுக்கு எதிரான 10 குற்றச்சாட்டுகளும் தனித்தனியே நீதிபதி அஸுரா அல்வியின் முன்னிலையில் வாசிக்கப்பட்டன. எனினும், 69 வயது இசா அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்.

முதலாவது குற்றச்சாட்டில், இசா பெட்லா முதலீட்டு நிறுவனத்தின் இயக்குநர் என்ற பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்நிறுவனத்தின் பணத்தில் இருந்து கூச்சிங்கில் உள்ள மெர்டேக்கா பேலஸ் ஹோட்டல்& சுட்ஸ் தங்குவிடுதியை பெட்லா இயக்குநர் வாரியத்தின் அனுமதி இல்லாமலேயே 16 கோடி ரிங்கிட்டுக்கு வாங்க அனுமதி அளித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் அக்குற்றத்தை, 50-ஆவது மாடி, மெனாரா பெல்டா, பிளாட்டிணம் பார்க், எண்.11, பெர்சியாரான் கேஎல்சிசியில் 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதியன்று புரிந்திருப்பதாக கூறப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவியல் சட்ட செக்சன் 409-இன் கீழ் அவருக்கு அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பிரம்படியும், அபராதமும் விதிக்கப்படலாம்.

இதர 9 குற்றச்சாட்டுகளில், மெர்டேக்கா பேலஸ் ஹோட்டல்& சுட்ஸ் தங்குவிடுதியை வாங்குவதற்கு அனுமதி வழங்க முகமட் ஸாஹிட் முகமட் அரிப் மூலமாக கெகாசான் அபாடி புரோப்பட்டிஸ் நிறுவனத்தின் இயக்குநர் வாரிய உறுப்பினர் இக்வான் ஸாய்டெலிடம் இருந்து இசா 30 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட்டை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டு ஜூலை 21-ஆம் தேதிக்கும் 2015-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், 49-ஆவது மாடி, மெனாரா பெல்டா, பிளாட்டிணம் பார்க், எண்.11, பெர்சியாரான் கேஎல்சிசியில் இசா இந்தக் குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மலேசிய ஊழல் தடுப்பு சட்டத்தின்படி அவருக்கு அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker