Latestமலேசியா

அன்னிய தொழிலாளர் சம்பளத்தில் 20% ‘பிடித்தம்’: திட்டத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பு!

கோலாலம்பூர், டிசம். 16-முதலாளிகளை விட்டு அன்னியத் தொழிலாளர்கள் ஓடி விடாமல் இருப்பதற்காக, அவர்களின் சம்பளத்தில் 20 விழுக்காட்டினை முதலாளிகள் ‘பிடித்தம்’ செய்து வைத்துக் கொள்ளவேண்டும் என்ற மனித வள அமைச்சின்ஆலோசனைக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

அவ்வாறு சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகையை சொக்கோவின் கீழ் வைக்கவேண்டும் என்றும் இரு தரப்பினருக்கும் சமமான பலனைத் தரும் வகையில் இந்த உத்தேசத் திட்டம் அமையும் என்றும் மனித வளத் துறை அமைச்சர் எம். குலசேகரன் கூறியிருந்தார்.

அவ்வாறு சேர்க்கப்படும் பணத்தை வேலை பர்மிட் முடிந்து அன்னியத் தொழிலாளர்கள் தாயகம் திரும்பும் போது மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

இத்தகைய திட்டமானது, கட்டாயப்படுத்தப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் நிலையை ஊக்குவிப்பதாக அமைந்து விடும் என்றும் இது அனைத்துலக தொழிலாளர் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் கண்டனத்திற்கு இலக்ககலாம் என்றும் மலேசிய தொழிற்சங்க காங்கிரசான எம்.டி.யூ.சி.யின் தலைமைச் செயலாளர் ஜே. சாலமன் குறிப்பிட்டார்.

நடைமுறையில், அன்னியத் தொழிலாளர்கள் வெளியேறாமல் இருக்க பல முதலாளிகள் அவர்களுடைய கடப்பிதழ்களை வாங்கி வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதுவே சட்டவிரோதமான செயல்தான்.

இந்நிலையில் தொழிலாளர்களின் சம்பளத்தில் 20 விழுக்காட்டை பிடித்து வைத்துக் கொள்ளும் உத்தேசத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் அன்னிய தொழிலாளர்களின் நிலைமை இதைவிட மோசமாகிவிடும் என்றார் அவர்.

இது அனைத்துலக தொழிலாளர் தர விதிமுறைகளுக்கு முரணானது என்பதால் இத்திட்டத்தை பரிசீலிக்க வேண்டியதில்லை என்று சாலமன் வலியுறுத்தினார்.

சம்பளத்தில் பிடித்தம் அஎய்யும் திட்டமானது அடிமைத் தொழிலாளைகளை உருவாக்கும். ஒரு திட்டமிடப்பட்ட நிறுவனமயப்படுத்தப்பட்ட கொத்தடிமை முறைக்கு வழிவகுத்து விடும் என்று தெனாகானித்தா அமைப்பின் நிர்வாக இயக்குனர் குளோரின் தாஸ் கூறினார்.

ஒரு கண்ணியமான சம்பளம், கண்ணியமான வேலைச் சூழல் மற்றும் கண்ணியமான வாழ்க்கை முறைக்கு வழி வகுத்தால் எதற்காக அன்னிய தொழிலாளர்கள் முதலாளிகளை விடுத்து ஓட்டம் பிடிக்கப் போகிறார்கள்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

சம்பளத்தில் பிடித்தம் செய்யும் முறை ஒட்டுமொத்தமாக அதிர்ச்சி அளிக்கக் கூடிய அவமரியாதையான திட்டம் என்று வடக்கு- தெற்கு முன்னெடுப்பு என்ற மனித உரிமை அமைப்பின் நிர்வாக இயக்குனர் அட்ரியன் பெரேரா கூறினார். உடனடியாக இந்தத் திட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டு அதற்காக மன்னிப்பும் கேட்கப்படவேண்டும் என்றார் அவர்.

மலேசியாவுக்கு வந்து கடுமையாக உழைத்துச் சம்பாதித்து தங்களின் குடும்பத்தை காப்பாற்றப் போராடும் அன்னியத் தொழிலாளகளுக்கு இந்தத் திட்டம் மிக மிக அநீதியானது என்று சோசலிஸ மலேசிய கட்சியைச் சேர்ந்த முன்னாள் சுங்கை சிப்புட் எம்.பி.யான டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

இடைத் தரகர்கள், ஏஜெண்டுகள் என பல்வேறு வழிகளில் அன்னியத் தொழிலாளர்களைச் சுரண்டும் செயல் முறைகளுக்கு நீதி கிடைக்க வழி வகுப்பது போன்ற தொழிலாளர் சார்ந்த பல முக்கிய பிரச்னைகள் இருக்கும் நிலையில், அவற்றின் மீது மனிதவள அமைச்சர் குலசேகரன் கவனம் செலுத்த வேண்டும் என்று மைக்கேல் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker