Latestமலேசியா

எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு? -கிட் சியாங் கேள்வி

கோலாலம்பூர், டிசம்.19- அம்னோ கட்சித் தலைவர் பதவியிலிருந்து டத்தோஸ்ரீ டாக்டர் ஸாஹிட் ஹமிடி விலகிக் கொண்டதை தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் தலைவராக யார் செயல்படுவது என்று ஜசெக கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

சபா மாநில அம்னோ தலைவராக நியமிக்கப் பட்டுள்ள கினாபாதாங் எம்பி டத்தோஸ்ரீ பூங் மொக்தார் எதிர்க்கட்சியின் தலைவராக நாடாளுமன்றத்தில் செயல்படுவாரா? என்று ஜசெகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான லிம் கிட் சியாங் வினவினார்.

“கொடுக்கப்பட்ட அழுத்தங்களை தாங்கிக் கொள்ள முடியாமல், ஸாஹிட் ஹமிடி தனது பதவியை துறப்பதாக அறிவித்து, தனது உதவித் தலைவரான டத்தோஸ்ரீ முகமட் ஹசானிடம் தனது பொறுப்புகளை ஒப்படைத்துள்ளார்.

“நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான தனது பதவியை, ஸாஹிட் யாரிடம் ஒப்படைக்கவிருக்கின்றார்” என்று இஸ்கண்டார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினரான கிட் சியாங் கேள்வி எழுப்பியுள்ளார்.

முகமட் ஹசான் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல. அவர் சட்டமன்ற உறுப்பினர் என்பதை அவர் சுட்டிக் காட்டினார். அம்னோ பாதாளத்திற்கு சென்று விடாமல் காப்பாற்றப் பட வேண்டும் என்ற அடிப்படையில், தலைவர் பதவியை தாம் துறப்பதாக ஸாஹிட் நேற்று அறிவித்தார். அம்னோவின் அந்த நிலைமைக்கு காரணம், அம்னோ தலைவர்கள் தான் என்று கிட் சியாங் சாடினார்.

“:இந்த அவமதிப்புகளையும், அவமானங்களையும் அம்னோ தலைவர்கள் தாமாகவே தேடிக் கொண்டனர். அம்னோவையும், மலேசியாவையும் ‘ஏமாற்றியது’ போதாது என்பதை போல், அவர்கள் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கை அம்னோ தலைவராக தேர்ந்தெடுத்தனர்.

“அவர், 1எம்டிபி நிதியில் மோசடிகளை நிகழ்த்தி, நாட்டிற்கும் மக்களுக்கும் அவமானத்தை இழைத்தார். இதுவரை, அது குறித்து அவர் சிறு வருத்தம் கூட கொள்ளவில்லை” என்று கிட் சியாங் குறிப்பிட்டார்.

நாட்டிற்கு ஏற்பட்ட அவமானத்தில், ஸாஹிட் ஹமிடிக்கும் பங்குண்டு என்றும், அவர் நஜிப்பின் வலது கையாக செயல்பட்டார் என்றும் லிம் கிட் சியாங் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker