Latestமலேசியா

சையட் சடிக்கை சாடுவதா? இராமசாமிக்கு பேரா பெர்சத்து கட்சி கண்டனம்

ஈப்போ, டிசம். 21- பிரிபூமி பெர்சத்து கட்சியின் இளைஞர் தலைவர் சையட் சடிக்கிற்கு எதிராக பினாங்கின் இரண்டாவது துணை முதல்வர் டாக்டர் இராமசாமி கண்டனம் தெரிவித்து இருப்பது அடிப்படையற்ற ஒன்று என்றும் இது அதிக பட்சமான செயல் என்றும் பேரா பெர்சத்து கட்சி சாடியது.

அமைச்சர் பதவியில் இருந்து பி.வேதமூர்த்தியை விலக்க வேண்டும் என்று கோரி சையட் சடிக் தலைமையில் இளைஞர் பிரிவினர், பெர்சத்து கட்சி அவைத் தலைவரும் பிரதமருமான துன் மகாதீரிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.

இதுகுறித்து கருத்துரைத்திருந்த டாக்டர் இராமசாமி, சையட் சடிக் செய்த காரியம் துன் மகாதீரையே அவமதிக்கும் செயலாகும் என்று கண்டித்திருந்தார்.

சுபாங் கோயில் விவகாரத்தின் போது ஒற்றுமைத் துறை அமைச்சர் என்ற முறையில் வேதமூர்த்தி தம்முடைய கடமையைச் சரிவரச் செய்யவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் அவரை நீக்க வேண்டும் என்று சையட் சடிக் மகஜர் வழங்கியிருந்தார்.

அமைச்சரை நியமிப்பது பிரதமருக்கு உரிய உரிமை என்றும் பிரதமரின் நியமனத்திற்கு எதிராக மகஜர் அளித்திருப்பதன் வழி சையட் சடிக் பிரதமருக்கு மரியாதை குறைவை ஏற்படுத்தும் வகையில் நடந்துள்ளார் என்றும் இராமசாமி விமர்சித்து இருந்தார்.

இந்நிலையில் இராமசாமியின் குற்றச்சாட்டுக்கள் அடிபடையில்லாதவை என்று பேரா மாநில பெர்சத்து இளைஞர் தலைவர் முகம்மட் ஹபிஸ் முபின் தெரிவித்துள்ளார்.

மகஜர் வழங்குவது என்பது எந்த வகையிலும் பிரதமரை அவமதிப்பது அல்ல. சம்பந்தப்பட்ட தரப்பிடம் கோரிக்கையை அல்லது யோசனையை முன்வைப்பதற்கான ஒரு வழிமுறை தான் மகஜர் வழங்குவதாகும் என்று ஹபிஸ் முபின் சொன்னார்.

இவ்விவகாரத்தில் வேதமூர்த்தியை நீக்க வேண்டும் என்று பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவு கேட்டுக் கொண்டது அந்தப் பிரிவின் நிலைப்பாடு என்று அவர் சொன்னார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker