Latestமலேசியா

தாசெக் குளுக்கோர் எம்.பி.தொகுதி: வாக்கு மறு எண்ணிக்கைக்கு உத்தரவு

பினாங்கு, டிசம். 21- கடந்த பொதுத்தேர்தலில் தாசெக் குளுக்கோர் நாடாளுமன்ற தொகுதியில் அளிக்கப்பட்ட வாக்குகளை மீண்டும் எண்ணவேண்டும் என்று கோரி செய்து கொள்ளப்பட்ட மனுவுக்கு சிறப்புத் தேர்தல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பாதுகாக்கப்பட்ட இந்தத் தொகுதி ஆவணங்கள் அனைத்தும் உயர்நீதிமன்ற மூத்த துணை பதிவதிகாரி முன்னிலையில் மீண்டும் பரிசீலனைக்கு திறக்கப்பட்ட வேண்டும் என்றும் நீதிபதி டத்தோ ஹாசிம் ஹம்சா உத்தரவிட்டார்.

அடுத்த ஜனவரி 2 ஆம் தேதி பினாங்கு உயர்நீதிமன்றத்தில் அனைத்துத் தரப்பு வழக்கறிஞர்களின் முன்னிலையில் அனைத்து ஆவணங்களும் பரிசீலனைக்கு திறக்கப்படும். தாசெக் குளுக்கோர் தொகுதியில் போட்டியிட்ட ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை துல்லியமாக தீர்மானிக்கப்படும்.

தாசெக் குளுக்கோரின் தேர்தல் முடிவுக்கு எதிராக செனட்டர் டத்தோ மார்ஷுகி யஹ்யா தேர்தல் வழக்கைத் தொடுத்திருந்தார். இருப்பினும், கடந்த செப்டம்பரில் இந்த வழக்கை சிறப்பு தேர்தல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பின்னர் இந்த முடிவை எதிர்த்து அவர் கூட்டரசு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் முடிவை தள்ளுபடி செய்து, முழுமையாக மீண்டும் தேர்தல் நீதிமன்றத்தின் முன்னிலையில் விசாரிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதன் பின்னர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை சார்ந்த ‘மனு-14’-இன் அனைத்து படிவங்களும் மீண்டும் திறக்கப்பட்டு வழக்கறிஞர்களின் முன்னிலையில் மறுபடியும் எண்ணப்பட வேண்டும் என்று செனட்டர் மார்ஷுகி செய்து கொண்ட மனு, இப்போது சிறப்பு தேர்தல் நீதிமன்றத்தில் ஏற்கப்பட்டுள்ளது.

இந்த ‘மனு-14’ என்பது ஒவ்வொரு வாக்குப் பதிவு சாவடிகளிலும் பதிவான வாக்குகளின் பட்டியலை கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தாசெக் குளுக்கோர் நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள பெர்மாத்தாங் பெராங்கான், சுங்கை டுவா, மற்றும் தெலோக் ஆயர் தாவார் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் அனைத்து வாக்கு ஆவணங்களும் பரிசோதனைக்காக நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்படும்.

இந்தத் தொகுதியில் கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் மார்ஷுக்கி 81 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார். இந்தத் தொகுதியில் டத்தோ ஷாபுடின் யஹ்யா அம்னோ வேட்பாளராக போட்டியிட்டு 81 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். எனினும் பின்னர் அம்னோவை விட்டு விலகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker