Latestமலேசியா

இறுதிச் சடங்கின்போது பட்டாசு வெடித்த நபர்கள் கைது; போலீசுக்கு இந்து சங்கம் பாராட்டு!- (video)

கோலாலம்பூர்,டிச.27-கடந்த சனிக்கிழமை ஒருவரின் இறுதிச் சடங்கை முன்னிட்டு கிள்ளான், சிம்பாங் லீமாவில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதன் தொடர்பில் போலீஸ் படைக்கு மலேசிய இந்து சங்கம் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.

ஒருவரின் இறப்பினை மதிக்கும் வகையில் நடத்தப்படும் இறுதிச் சடங்கின்போது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் துக்கத்தையும் பொருட்படுத்தாது பட்டாசுகளை வெடிக்கும் சம்பவங்களை இந்து சங்கம் தொடர்ந்து கண்டித்து வருகிறது.

அதன் தொடர்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு, அரச மலேசிய போலீஸ் படையின் தலைவரிடம்
மலேசிய இந்து சங்கம் மனு ஒன்றினை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. அம்மனுவில் சவ
ஊர்வலத்தின்போது பட்டாசு வெடித்தல் போன்ற அசௌகரியத்தை ஏற்படுத்தும் செயல்கள்
செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கம் கேட்டுக் கொண்டது.

இந்நிலையில், கிள்ளானில் நடந்த சம்பவத்தில் தக்க நேரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து
தகாத செயலைப் புரிந்த இரு இளைஞர்களைக் கைதுச் செய்த போலீசுக்கு மலேசிய இந்து சங்கம் நன்றி கூறிக் கொண்டுள்ளது. குறிப்பாக, தென் கிள்ளான் போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் ஷம்சுல் அமார் ரம்லிக்கு அச்சங்கம் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

இம்மாதிரியான சம்பவங்கள் நாடெங்கிலும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், போலீசின் இந்த அதிரடி நடவடிக்கை இதற்கு ஒரு முற்றுப்புள்ளியாக அமையும் என்றும் அச்சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இறுதி மரியாதை எப்போதும் அமைதியாக நடக்க வேண்டியது அவசியம். ஆனால், இன்றோ சிலரின் அடாவடி செயலால் துக்க அனுசரிப்போர் மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். இந்த தகாத செயல்கள் இந்து ஆகமத்திற்கு எதிரானவை. அவற்றை நாம் தவிர்ப்பது அவசியம். இம்மாதிரியான சம்பவங்கள் நாட்டில் எங்கு நடந்தாலும் போலீஸ் துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மற்றவர்களுக்கும் எடுத்துக்காட்டாக அமையும் என்று இந்து சங்கம் கூறியுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker