Latestமலேசியா

அரசு குத்தகை கோரிய பெர்சத்து தலைவர்: ஆவேசம் அடைந்தது பெர்சே 2.0

கோலாலம்பூர், டிசம். 31- கட்சி இயந்திரம் சரியாகச் செயல்பட வேண்டுமானால் கட்சியினருக்கு குத்தகைகள் வழங்கப்பட வேண்டும் என்று பிரிபூமி பெர்சத்து கட்சியின் உதவித் தலைவர் அதுல் ரஷிட் அப்துல் ரஹ்மான் விடுத்த கோரிக்கை குறித்து பெர்சே 2.0 உள்பட பல தரப்புகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளன.

கடந்த மே மாதம் தேசிய முன்னணி அரசாங்கம் மக்களால் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டதற்கு இத்தகைய ஊழல்கள் தான் காரணம் என்று பெர்சே சுட்டிக்காட்டியது.

அரசாங்கத்தில் இடம்பெறுவது என்பது ஒரு வெகுமதியோ, பரிசோ அல்ல. மாறாக அரசியல்வாதிகள் மீது மக்கள் வைத்த நம்பிக்கை. ஆக்ககரமாக, நேர்மையாக செயலாற்றுவதற்கு மக்கள் தந்த வாய்ப்பு. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த ‘சேவைக் குத்தகை’ மக்களால் புதுப்பிக்கப்படும் என்று தேர்தல் சீர்திருத்த அமைப்பான பெர்சேயின் அறிக்கை கூறியது.

பிரிபூமி பெர்சத்து கட்சியின் மாநாட்டில் பேசிய அதன் உதவித் தலைவரும் முன்னாள் தேர்தல் ஆணையத் தலைவருமான அஒதுல் ரஷிட், கட்சியின் பிரமுகர்களுக்கு அரசாங்க குத்தகைகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போது பெரும்பாலான பேராளர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர் என்றாலும் கட்சித் தலைவர்களில் சிலர் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், ஆளும் கட்சி அத்தகைய அரசாங்க அனுகூலங்களை கோராமல் விட்டால் அது முட்டாள்தனம் என்றும் சரியான வழியோ, அல்லது தவறான வழியோ எப்படியாவது தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்றும் அப்துல் ரஷிட் குறிப்பிட்ட கருத்துகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கின்றன.

இத்தகைய அதிகாரத் துஷ்பிரயோகம் காரணமாகத் தான் அம்னோ தலைமையிலான பழைய அரசாங்கம் வீழ்ச்சி கண்டது. அப்படி மக்களால் அந்த அரசாங்கம் நிராகரிக்கப்பட்டது என்பதையே அப்துல் ரஷிட்டும் அவரது பேச்சுக்கு கைதட்டிய பேராளர்களும் மறந்து விட்டனர் என்று அது சுட்டிக்காட்டியது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker