Latestமலேசியா

DBKL-இல் கோயில்கள் பதிவு; ஏற்புடையதல்ல!- இந்துதர்ம மாமன்றம்

கோலாலம்பூர்,டிச.31- குறிப்பிட்ட காலத்திற்குள் கோலாலம்பூர் மாநகரத்தில் உள்ள கோயில்கள் அனைத்தும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தில் (DBKL) பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் அவ்வாறு செய்யத் தவறினால் அக்கோயில்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடந்த வாரம் ‘பிரி மலேசிய டுடே’ (FMT) இணையப் பத்திரிக்கையில் வெளியான கூட்டரசு பிரதேச அமைச்சின் அறிவிப்பைக் கண்டு மலேசிய இந்து தர்ம மாமன்றம் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாக அதன் தேசியத் தலைவர் இராதகிருஷ்ணன் அழகுமலை தெரிவித்தார்.

பின்வரும் காரணங்களின் அடிப்படையில் அத்தகைய அறிவிப்பும் முடிவும் அவசியமில்லாதது என மலேசிய இந்து தர்ம மாமன்றம் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்:-

1) பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதியில் மாநிலங்கள் தோறும் இந்து அறப்பணி வாரியம் அமைக்கப்படும் எனவும் அவ்வாரியத்தின் தலையாய கடமைகளுள் ஒன்றாக இந்து கோயில்களுக்கான வழிகாட்டிச் சட்ட விதிகளையும் கோயில்களுக்கான செல்நெறிகளையும் வகுத்தளிக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது.

2) கூட்டரசு பிரதேச அமைச்சின் கீழ் இயங்கும் ரிபி (RIBI- Rumah Ibadat Bukan Islam) எனப்படும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கான சிறப்புச் செயற்குழு இந்துக் கோயில்கள் தொடர்பான சிக்கல்களுக்கு நீண்ட காலமாகத் தீர்வு கண்டு வந்துள்ளது. இச்சிறப்புச் செயற்குழுவிற்கும் அமைச்சின் இம்முடிவு முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை.

3) சொந்த நிலங்களிலோ தங்களுக்கு உரிமையில்லாத நிலங்களிலோ அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான கோயில்கள், அக்கோயில்களின் பெயரிலோ அல்லது இயக்கங்களின் பெயரிலோ சங்கங்களின் பதிவகத்தில் (ROS) தங்களைப் பதிந்து கொண்டுள்ளன. அவ்வாறு இருக்கையில் மீண்டும் மற்றுமொரு பதிவு எதற்கு என்பதை இந்துதர்ம மாமன்றம் வினவுகிறது.

முஸ்லிம் அல்லாதவருக்கு உரிய வழிபாட்டுத் தலங்களை அமைப்பதற்கான வழிகாட்டல்களைப் பிரதமர் துறை வெளியிட்டு உள்ளதாக ஊட்டரசு பிரதேச அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ நோர் இஹ்சான் பிரி மலேசிய டுடே (FMT)-இல் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன் உள்ளடக்கங்கள் பின்வருமாறு:-

1) முஸ்லிம் அல்லாதவர்களுக்கான வழிபாட்டுத் தலங்கள் அவர்கள் அதிகமாய் வசிக்கும் இடங்களில் அமைக்கப்பட வேண்டும்.

2) முஸ்லிம் அல்லாதவர்களுக்கான வழிபாட்டுத் தலங்களை அமைப்பதற்கானவிண்ணப்பங்களை மாநில சமயப் பேரவைக்கு (Majlis Agama Negeri) அனுப்பி வைத்து அவர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

இந்நிலையில், மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு விதிமுறைகளுள் முதலில் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்றே முஸ்லிம் அல்லாதவர்களுக்கான வழிபாட்டுத் தலங்களை அமைப்பதற்குப் போதுமானதாகும் என்று இந்துதர்ம மாமன்றம் கூறியுள்ளது.

இரண்டாவது விதிமுறையின் அடிப்படையில் பார்ப்போமனால், மாநில சமயப் பேரவை (Majlis Agama Negeri) முஸ்லிம் அல்லாதவர்களுக்கான வழிபாட்டுத் தலங்களை அமைப்பதற்கான தேவையை எவ்வாறு உணர்ந்து முடிவுக்கு வர இயலும் என்று அம்மாமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மலேசிய மக்களின் சமயச் சுதந்திரத்திற்கும் இடமளித்துள்ள கூட்டரசு அரசியல் சாசனத்திற்கு முரணான ஒன்றாக இது விளங்குவதைக் காண முடிகிறது. எதற்காக முஸ்லிம் அல்லாதவர்களுக்கான வழிபாட்டுத் தலங்களைக் கண்காணிப்பதற்கு இத்தனை அரசு நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன என்ற மற்றொரு கேள்வியையும் இந்துதர்ம மாமன்றம் எழுப்பியுள்ளது.

இதனிடையே, இந்து சமயத்தை உட்படுத்திய பிரச்சனைகளுக்கு சுமூகமான முறையில் தீர்வு காண, இந்துதர்ம மாமன்றம் மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களோடு இணைந்து செயல்படத் தயாராக உள்ளது என்று இராதகிருஷ்ணன் கூறிக் கொண்டார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker