Latestமலேசியா

கேமரன்மலை இடைத் தேர்தல்: பாஸ் உதவியை ஏற்போம்! – மஇகா திட்டவட்டம்!

ஈப்போ, ஜன.2- பாஸ் கட்சியுடனான கடந்த கால முரண்களைத் தேசிய முன்னணி களைந்து விட விருப்பம் கொண்டுள்ளது. கேமரன் மலைத் தேர்தலில் பாஸ் கட்சி உதவ முன்வந்திருப்பதை தாங்கள் ஏற்றுக் கொள்ளவிருப்பதாக மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

இப்போது பாஸ் கட்சியும் தேசிய முன்னணியும் எதிர்க்கட்சிகள் வரிசையில் அமர்ந்திருக்கின்றன. தங்களின் பொது எதிரியான ஆளும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியுடன் போராட்டத்தில் இறங்கியுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நாங்கள் ஆளும் அரசாங்கத்தில் இருந்த போது பாஸ் கட்சி பற்றி மாற்றுக் கருத்தினைக் கொண்டிருந்தோம். ஆனால் நாங்கள் இரு தரப்புமே எதிர்க்கட்சிகளாக இருக்கிறோம். பாஸ் கட்சியானாலும் அமானா கட்சியானாலும் எங்களைப் பொறுத்தவரை வித்தியாசம் கிடையாது என்று அவர் சொன்னார்.

கேமரன் மலை நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் உதவி செய்ய பாஸ் கட்சி முன்வந்திருப்பது தொடர்பாக உள்ளூர் ஊடகம் ஒன்றிடம் கருத்துரைத்த போது டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

பாஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அமானா கட்சி ஜசெகவுடன் ஒத்துழைக்கும் போது- பக்காத்தான் கூட்டணியில் ஜசெகவுடன் அது பங்காளியாக இருக்கும் போது அதே வகையான ஒத்துழைப்பை பாஸ் கட்சிக்கு மஇகாவினால் வழங்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

பாஸ் கட்சியுடன் எங்களது ஒத்துழைப்பு தொடர்ந்து வளர்ந்து வருவது குறித்து தாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் நாட்டில் இரண்டு கட்சி ஆட்சி முறையை வலுப்படுத்தும் வகையில் மஇகா மற்றும் பாஸ் கட்சி இடையேயான இந்த பரஸ்பர உதவி அமையும் அவர் கூறினார்.

இதனிடையே இதற்கு முன்பாக, பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ தக்கியுடின் ஹசான் விடுத்திருந்த அறிக்கை ஒன்றில், கேமரன் மலைத் தொகுதி இடைத்தேர்தலில் மஇகா மேற்கொள்ளும் பிரசாரத்திற்கு உதவும் வகையில் பாஸ் கட்சியின் தேர்தல் இயந்திரத்தை பயன்படுத்த கட்சி விருப்பம் கொண்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

மஇகா மீண்டும் அந்தத் தொகுதியைக் கைப்பற்ற அதனுடன் இணைந்து தனது சொந்த பிரசாரப் பணியை பாஸ் மேற்கொள்ளும் என்று தக்கியுடின் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker