Latestமலேசியா

வீடற்றோருக்கான இலவச கிளினிக்: அறநிதிக்கு உதவுங்கள்!

கோலாலம்பூர்,ஜன.4- நமக்கு உடம்பு சரி இல்லாமல் போனால், நம்மை கவனித்துக் கொள்ள குடும்பம் இருக்கிறது; ஆனால், தங்குவதற்கு கூட வீடு இல்லாமல் வீதிகளில் படுத்துறங்கி வாழ்க்கையை நகர்த்தி வருவோருக்கு உடம்பு சரி இல்லாமல் போனால், அவர்களைக் கவனித்துக் கொள்ள யார் இருக்கிறார்கள்?

இத்தகைய கேள்வி எல்லோருக்குள்ளும் எழுந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், இந்தக் கேள்வி “தெட்டி பேர் (teddy bear) டாக்டர் என்றழைக்கப்படும் டாக்டர் எஸ்.மதுசுதன் என்பவருக்குள் எழுந்ததால்தான் இன்று கோலாலம்பூர் மாநகரில் வீதிகளில் வாழும் எத்தனையோ பேர் அவரிடம் இலவசமாக மருத்துவம் பார்த்துக் கொள்கிறார்கள்.

நான்காண்டுகளுக்கு முன் அரசு சார்பற்ற ஓர் அமைப்பில் இணைந்து சேவையாற்றிய சமயத்தில்தான் மதுசுதனுக்குள் இப்படியொரு கேள்வி எழுந்து, நடமாடும் இலவச கிளினிக்கை செயல்படுத்த வேண்டும் என்று அவருக்கு எண்ணம் தோன்றியதாம்.

தொடக்கத்தில் சிறிதளவில் தொடங்கப்பட்ட “தெட்டி பேர்” கிளினிக்கில் தற்போது 40 தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். இதுவரையில் 1000-க்கும் மேற்பட்ட வீடற்றவர்களுக்கு அவர்கள் இலவசமாக மருத்துவம் பார்த்திருப்பதாக மதுசுதன் கூறினார்.

மதுசுதனுக்கு செராஸில் சொந்தமாக கிளினிக் இருக்கிறது. இருந்தபோதிலும், வீடற்றவர்கள் வாழும் ஜாலான் ஹாங் லெக்கியூ, ஜாலான் பாஹாங்கிலுள்ள வீடற்றவர்கள் விடுதி, பூர்வக்குடியினர் கிராமங்கள் ஆகிய பகுதிகளில் அவர் நடமாடும் இலவச கிளினிக்கை அவர் நடத்தி வருகிறார். இந்த இலவச கிளினிக்கை நடத்துவதற்கு எப்படியோ ஒவ்வொரு மாதமும் 4,000 ரிங்கிட் தேவைப்படும் என்றார் மதுசுதன்.

இப்படியாக மதுசுதன் நான்காண்டுகளை கடந்து வந்து விட்ட நிலையில் தற்போது தெட்டி பேர் கிளினிக்கை நடத்த பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவ்வளவு காலம் நடமாடும் கிளினிக்காக இயங்கி வந்த அவர்களின் வேன் எந்நேரத்திலும் பழுதாகிவிடும் நிலையில் இருக்கிறதாம்.

அதனால், மதுசுதன், RHB வங்கியின் ஒத்துழைப்புடன், எல்லா முதலுதவிகளும் இருக்கும்படியான ஒரு புதிய வேனை வாங்குவதற்கு நிதி திரட்டும் திட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதைத் தவிர்த்து தங்களுக்கு மேலும் மருத்துவர்கள் பலர் தன்னார்வ அடிப்படையில் சேவையாற்ற தேவைப்படுவதாகவும், மருத்துவ உபகரணங்களும், மருந்து மாத்திரைகள் வாங்குவதற்கு நிதி தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், RHB வங்கி “தாபோங் தெட்டி”-ஐ திறந்திருப்பதாகவும், விருப்பம் உள்ளவர்கள் அதில் தங்களால் ஆன நிதியைத் தரலாம் என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker