Latestமலேசியா

அடுத்து புதிய மாமன்னர் யார்: சுல்தான்கள் மன்றம் கலந்து பேசும்!

கோலாலம்பூர், ஜன.6- மலேசியாவின் 15 ஆவது யாங்டி பெர்த்துவான் அகோங் பொறுப்பில் இருந்து இன்று கிளந்தான் சுல்தான் ஐந்தாம் முகம்மட் விலகிக் கொண்டதைத் தொடர்ந்து அடுத்த மாமன்னர் யார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக நிலவுகிறது.

மலேசிய கூட்டரசின் அடுத்த மாமன்னர் தேர்வை ஆராயவும் விவாதிக்கவும் நாளை ஆட்சியாளர்களின் மாநாடு கூட்டப்படவிருக்கிறது என்று தெரிய வந்துள்ளது.

எனினும் அடுத்த மாமன்னர் குறித்து உடனடியாக முடிவு எடுக்கப்படுமா? என்று தெரியவில்லை என மலேசிய கினி செய்தி ஒன்று கூறுகிறது. தற்காலிகமாக நடப்புத் துணை மாமன்னரான பேரா சுல்தான் நஷ்ரின் ஷா, இடைக்கால மாமன்னராக பொறுப்பு வகிப்பார்.

மாமன்னர் எப்போதுமே சுழற்சி வரிசை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார். அந்தப் பட்டியலிலுள்ள வரிசைப்படி பகாங் அந்த வாய்ப்பை அடுத்துப் பெறவிருக்கிறது. ஆனால், பகாங் சுல்தான் உடல்நலக் குறைவாக உள்ளார். பட்டத்து இளவரசராக துங்கு அப்துல்லா இருந்து வருகிறார்.

கிளந்தான் சுல்தானின் தந்தை சுல்தான் இஸ்மாயில் பெட்ரா உடல் நலம் குன்றியிருந்த சூழலை எதிர்நோக்கி இருந்தார் என்றாலும் அப்போது ஐந்தாம் முகம்மட் கிளந்தானின் அதிகாரப்பூர்வ சுல்தானாக இருந்தார் .

2009 ஆம் ஆண்டில் சுல்தான் இஸ்மாயில் பெட்ரா பக்கவாதத்திற்கு உள்ளானார். தொடர்ந்து அவர் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் 2010ஆம் ஆண்டில் கிளந்தான் அரியணை மன்றம் சுல்தான் ஐந்தாம் முகம்மட்டை புதிய சுல்தானாக பிரகடனம் செய்தது.

ஆனால் இன்னமும் பகாங் இளவரசர் துங்கு அப்துல்லா ரீஜெண்டாக தான் இருந்து வருகிறார். அதிகாரப்பூர்வ பகாங் சுல்தான் அல்ல.

இந்நிலையில் பகாங்கிலிருந்து மாமன்னரை தேர்ந்தெடுக்க முடியாத சூழல் ஆட்சியாளர்கள் அவைக்கு ஏற்பட்டால், அடுத்து அந்த வரிசையில் ஜொகூர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார் இடம்பெற்றுள்ளார். அவரை அடுத்து பேரா சுல்தான் அந்தப் பொறுப்புக்கு வருவார்.

அடுத்த மாமன்னரின் தேர்வு திட்டமிட்டப்படி நடந்தேறினால் ஏப்ரல் மாதத்தில் புதிய மாமன்னர் அரியணையில் அமர்வார் என்று கூறப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker