
கோலாலம்பூர், ஜன.6- பிராணிகளை உள்ளே கொண்டு வருவதற்கு சிங்கப்பூரில் கடுமையான தடை அமலில் இருந்த போதிலும் பல்வேறு புது யுக்திகளின் மூலம் விலங்குப் பிரியர்கள் தங்களின் முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
சிங்கப்பூருக்குள் நான்கு பூனைக் குட்டிகளைத் தனது சிலுவார் பாக்கெட்டில் வைத்துக் கடத்திக் கொண்டு செல்ல முயன்ற ஒருவர் பரிதாபகரமாக, துவாஸ் சுங்கச் சோதனைச் சாவடியில் குடிநுழைவு அதிகாரிகளிடம் பிடிபட்டார்.
அதேவேளையில் ஒருவரின் சிலுவார் பாக்கெட்டினுள் சிக்கிக் கொண்டு அந்தப் பூனைக் குட்டிகள் படாத பட்டிருக்கக்கூடும் என்பதை நினைத்துப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது.
சிங்கப்பூர் பதிவுப்பெற்ற கார் ஒன்று சோதனைச் சாவடியைக் கடந்த போது அதனைச் சோதனையிட உத்தரவிட்ட வேளையில் எதேச்சையாக 45 வயதுடைய அந்தக் காரின் உரிமையாளர் சிலுவார் பாக்கெட்டில் பூனைக் குட்டிகளுடன் பிடிபட நேர்ந்தது.
முறையான லைசென்ஸ் இல்லாமல் விலங்குகளையோ, பறவைகளையோ சிங்கப்பூருக்குள் கொண்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டால் அந்நபருக்கு 10,000 சிங்கப்பூர் டாலர் அபராதம் அல்லது ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தப் பூனைக்குட்டிகள் விலங்குகள் பராமரிப்புத் துறையின் கணகாணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.