Latestமலேசியா

சித்ரவதையால் சுயநினைவை இழந்த இரு குழந்தைகள்; பராமரிப்பாளர் கைது!

சீபு, ஜன. 9- இரு குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த குழந்தைப் பராமரிப்பாளர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

39 வயதாகிய அந்தப் பெண் பராமரிப்பாளர் 17 மாதம் மற்றும் 9 மாதக் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவிற்கு மிகக் கொடுமையான முறையில் அக்குழந்தைகளைச் சித்ரவதை செய்துள்ளதாக சீபு போலீஸ் தலைவர் ஸ்டான்லீ ஜோனத்தன் ரிங்கிட் கூறியுள்ளார்.

கொடுமைக்கு இலக்கான அவ்விரு குழந்தைகளுக்கும் தற்பொழுது சீபு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த இரு குழந்தைகளின் பற்கள் உடைக்கப்பட்டுள்ளன. மேலும், மூளைப் பகுதியில் ரத்தக் கசிவு ஏற்படும் அளவிற்கு அவர்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவ அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் ஆசிரியர்களாக பணியாற்றுவதால் காலை 5.30 மணிக்கெல்லாம் பராமரிப்பு இல்லத்தில் விட்டு விடுவார்கள். வழக்கம் போல நேற்றும் குழந்தைகளை அங்கு விட்டுச் சென்றுள்ளனர். பிறகு திடீரென குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக குழந்தைப் பராமரிப்பாளரிடம் இருந்து அவ்விரு குழந்தைகளின் பெற்றோருக்கு அழைப்பு வந்திருக்கிறது.

உடனடியாக தங்களின் குழந்தைகளைப் பார்க்கச் சென்ற பெற்றோர் குழந்தைகளின் நிலையைக் கண்டு பயந்து போய் அவர்களை சீபு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். உடல் ரீதியாக வதைக்கப்பட்டிருப்பதால்தான் குழந்தைகளுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்ததும் குழந்தைகளின் பெற்றோர் அதிர்ந்து போயிருக்கின்றனர்.

அந்த இரு குழந்தைகளும் தற்போது சுயநினைவின்றி சுவாசக் கருவியின் உதவியுடன் மருத்துவமனையில் இருக்கின்றன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker