Latestமலேசியா

கார் கழுவியாவது பிள்ளைய கரை சேர்க்கணும்; கலங்குகிறார் சுகுமாறன்!

ஷா ஆலாம்,ஜன.11- தான் கஷ்ட்டப்பட்டாலும் பரவாயில்லை; தன்னுடைய பிள்ளைங்கள கரை சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் பெற்றோர்கள். அண்மையில், அப்படியொரு தந்தையைப் பற்றிதான் சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

ஆம், கடந்த ஜனவரி 8-ஆம் தேதியன்று அடி கமால் என்ற ஒரு மலாய்க்கார சகோதரர் ஷா ஆலாம், செக்சன் 9-இல் தான் சந்தித்த கார் கழுவும் இந்திய ஆடவர் பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

ஷா ஆலாம், பாடான் ஜாவானில் வாழ்ந்து வரும் 40 வயது சுகுமாறன் என்ற அந்த ஆடவர் தனது மகளின் படிப்பிற்காக கார் கழுவி வருகிறார். அவருக்கு மக்கள் தங்களால் ஆன உதவிகளைச் செய்யுமாறு அடி கமால் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.அந்தப் பதிவு வைரல் ஆனதை அடுத்து யார் அந்த சுகுமாறன்? ஏன் அவருக்கு இந்த நிலை என்றெல்லாம் நமக்குள் பல கேள்விகள் எழுந்திருக்கும்.

ஆம், சுகுமாறன், ஈராண்டுகளுக்கு முன் நிகழ்ந்த விபத்தொன்றில் கடுமையாக காயமுற்றதால் கடினமான வேலைகளைச் செய்யும் ஆற்றலை இழந்தார். அதன் பிறகு, பாதுகாவலராக வேலை செய்திருக்கிறார். ஆனால், அந்த வேலைக்கான ஒப்பந்தமும் முடிந்துவிட வேறு வழி இன்றி சுகுமாறன் கார் கழுவி வருகிறார்.

அவருக்கு 12 வயதில் ஷர்மினி என்ற மகளும், 6 வயதில் ஹரிகனன் என்ற மகனும் இருக்கிறார்கள். அன்றாட வயிற்றுப் பிழைப்பிற்கு மட்டுமின்றி தனது பிள்ளைகளின் படிப்புக்காகவும் அவர் அயராது கார் கழுவி வருகிறார்.

“எங்கள் இரு பிள்ளைகளில் மூத்தவளான ஷர்மினி எங்களுடன் அதிகம் கஷ்ட்டத்தை அனுபவித்திருக்கிறாள். அவளுக்கு 6 வயது இருக்கும்போது வீட்டு வாடகை கட்ட முடியாமல் நாங்கள் ஷா ஆலாம், செக்சன் 25-இல் உள்ள பஸ் முனையத்தில் ஒரு மாதமாக படுத்துறங்கி இருக்கிறோம். அவளை எப்படியாவது கரை சேர்த்து விட வேண்டும்” என்று சுகுமாறன் கூறியுள்ளார்.

இதனிடையே, தங்கள் மீது இரக்கம் காட்டிய அடி கமாலுக்கு அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். அடி தனது கதையை சமூக ஊடகத்தில் பகிர்ந்து மக்களை உதவி செய்யக் கோருவார் என்று தான் சற்றும் நினைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார் சுகுமாறன். அடி கமால் தனது வங்கிக் கணக்கை எண்ணைக் கேட்டார்; ஆனால், அதை பேஸ்புக்கில் பகிரத்தான் என்று தனக்கு தெரியாது என்றார் அவர்.

“கார் கழுவதற்கு இவ்வளவு கட்டணம் என்று நான் கேட்க மாட்டேன். விருப்பப்பட்டதை தாருங்கள் என்பேன். சில இரக்கப்பட்டு கொஞ்சம் கூடுதலாக கொடுப்பார்கள்.

“ஆனால், ஒரு ரிங்கிட் மட்டுமே கொடுப்பவர்கள் உண்டு. ஆனால், அந்த ஒரு ரிங்கிட்டில் என் பிள்ளைக்கு ரொட்டி வாங்கலாமே. மறுப்பு சொல்லாமல் அந்த ஒரு ரிங்கிட்டை வாங்கிக் கொள்வேன்” என்று சுகுமாறன் கண்ணீர் மல்கக் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker