Latestஇந்தியா

தீவிர இனவெறியை நிராகரிக்க வேண்டும்! -புதுடெல்லியில் அன்வார் பேச்சு

புதுடெல்லி, ஜன.11- உலகளாவிய நிலையில் தீவிர தேசிய வெறி மற்றும் இனவெறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், அனைத்துலக பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தல் நேரக் கூடும் என்று பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

“அதி தீவிர தேசிய வாதம் உலக நிகழ்வாகி விட்டது. இதனால், அனைத்துலக ரீதியில் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தல் நேரக் கூடும்” என்று புது டெல்லியில் நிகழும் ராய்சீனா மாநாட்டில் அன்வார் சொன்னார்.

“அதி தீவிர தேசிய வாதம், மற்றும் இனவெறி, வன்முறைகளை தூண்டும். அதனால், அதனை நாம் நிராகரிக்க வேண்டும்” என்றார் அவர்.

ஐரோப்பிய தேசிய வாதம், இந்தியாவின் ‘வகுப்பு’ பிரிவினைகள், அரபு பிராந்தியத்தில் நிகழும் போர்கள் மற்றும் மோதல்கள், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், மற்றும் மலேசியாவில் நிகழ்ந்த கடந்த பொதுத் தேர்தல் மற்றும் மலேசியாவின் அரசியல் மாற்றங்கள் குறித்தும் அன்வார் அந்நிகழ்வில் கருத்துரைத்தார்.

“அதி தீவிர தேசிய வாதம் மற்றும் இனவெறித் தன்மைகள் அதிகரித்து வரும் அதே வேளையில், குடியேற்றங்களை தடுக்கும் அல்லது வெறுக்கும் தன்மைகளும் அதிகரித்து வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, குறிப்பிட்ட சில மதங்களை வெறுக்கும் குணமும் மக்கள் மத்தியில் உருவாகி வருகின்றன. அதனால், பல வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையில், மலேசியாவில் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாகவும், பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக்கு வந்தது முதல், நாட்டில் பல சிறந்த மாற்றங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் அம்மாநாட்டில் தெரிவித்தார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker