Latestமலேசியா

2018- இல் குற்றச்செயல்கள் 11.9 விழுக்காடு சரிவு! -ஐஜிபி

கோலாலம்பூர், ஜன.16- 2017-ஆம் ஆண்டில் நிகழ்ந்த குற்றச் செயல்களின் எண்ணிக்கை காட்டிலும், கடந்தாண்டு அக்குற்றச்செயல்களின் எண்ணிக்கை 11.9 விழுக்காடு குறைந்துள்ளது என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஃபூஸி ஹரூண் கூறினார்.

இருந்த போதிலும், குற்றச்செயல்கள் குறித்து பொதுமக்களின் உணர்தலில் எவ்வித மாறுபாடும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

நாடு தழுவிய நிலையில் உள்ள 14 மாநிலங்களில் உள்ள அனைத்து போலீஸ் புள்ளி விவரங்களும் இதனை உறுதிப் படுத்துவதாக அவர் தெரிவித்துக் கொண்டார்.

“குற்றச்செயல்களை தடுப்பதற்காக புக்கிட் அமான் குற்றத் தடுப்பு மற்றும் சமூக பாதுகாப்பு துறையால் எடுக்கப் பட்ட துரித நடவடிக்கைகளின் வாயிலாக குற்றச்செயல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது” என்று ஃபூஸி ஹரூண் சொன்னார்.

“நாடு தழுவிய நிலையில் குற்றச் செயல்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக பொதுமக்களும் போலீஸ் துறையினருக்கு தொடர்ந்து உதவி புரிந்து வருகின்றனர்” என்றார் அவர்.

கடந்தாண்டு வி.எஸ்.பி எனப்படும் தன்னார்வ விவேக கைத்தொலைபேசி ரோந்து செயலியை 1.2 மில்லியன் பொதுமக்கள் தங்களின் கைத் தொலைபேசிகளில் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

“அந்தச் செயலி வாயிலாக, 60,552 குற்றச்செயல்கள் குறித்த புகார்களை போலீஸ் துறை பெற்றது. அந்த எண்ணிக்கையில் 59,945 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

“இவ்வாண்டு, அந்தச் செயலி 1.5 மில்லியன் பொதுமக்கள் தங்களின் கைத் தொலைபேசிகளில் பதிவிறக்கம் செய்வர் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker