Latestமலேசியா

தமிழ்ப்பள்ளிகளுக்கான அறிவியல் போட்டிகளுக்கு அரசு ஊக்கமளிக்கும்- வேதா- (video)

கோலாலம்பூர்,ஜன.26- ஒவ்வோராண்டும் அஸ்தி (ASTI) எனப்படும் அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க இயக்கம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கென நடத்தும் இளம் ஆய்வாளர் அறிவியல் விழாவின் மூலமாக பயன்பெறும் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். குறிப்பாக, உட்புறப்பகுதிகளையும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களையும் சேர்ந்த மாணவர்களுக்கு இத்தகைய அறிவுசார் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் செனட்டர் வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார்.

அதன் தொடர்பில், அஸ்தி எடுக்கும் முயற்சிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து உதவியைப் பெற்றுத் தரவும் தான் தயாராக இருப்பதாக அவர் உறுதி அளித்தார்.

  

மாணவர்களின் அறிவியல் திறனை முன்னிறுத்தி புதிய மாற்றங்களுடன் இவ்வாண்டு நடத்தப்படவுள்ள இளம் ஆய்வாளர் அறிவியல் விழாவின் தொடக்க நிகழ்வை தலைநகர், மலாயாப் பல்கலைக்கழகத்தில் தொடக்கி வைத்தப் பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார்.

இதனிடையே, 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அறிவியல் விழா இதுவரையில் பல பரிணாமங்களைக் கடந்து வந்துள்ளது. இந்நிலையில், இவ்விழா இந்த ஆண்டு மேலுமொரு புதிய மாற்றத்துடன் நடத்தப்படவுள்ளதாக விழா இயக்குநர் சுபாஷ் விவரித்தார்.

பள்ளி அளவிலான அறிவியல் விழா வழக்கம் போலவே முதலாம் ஆண்டு முதல் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் வரையில் பரிசோதனை அடிப்படையிலும், திரட்டேடு தயாரிப்பு அடிப்படையிலும் நடைபெறவுள்ளது.

மாறாக, மாநில அளவிலான அறிவியல் விழா வழக்கம் போல் இல்லாமல் இவ்வாண்டும் பல மாற்றங்களைத் தாங்கி இடம்பெறவுள்ளது. அதாவது, ‘Hands on experiment’ என்கிற மாணவர்களே செய்து காண்பிக்கும் ஆய்வின் அடிப்படையில் அறிவியல் போட்டி நடைபெறவுள்ளது. மாணவர்கள் போட்டியன்று ஏற்பாட்டுக் குழுவினர் வழங்கும் சிக்கலுக்கு, கொடுக்கப்படும் உபகரணங்களைக் கொண்டு பரிசோதனைகளைச் செய்து உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்.

மாநில அளவில் தேர்வு செய்யப்படும் பள்ளிகள் தேசிய அளவில் நடைபெறும் அறிவியல் விழாவில் பங்கேற்க தகுதி பெறும்.

தேசிய அளவிலான அறிவியல் விழாவில், மொத்தம் 5 தலைப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்படும். அவற்றைல் ஒன்றினை தேர்வு செய்து அதற்கான ஆய்வினை மேற்கொண்டு பிறகு அதனை நீதிபதிகளிடமும் பார்வையாளர்களிடமும் படைத்துக் காட்ட வேண்டும். இவ்வாறு இவ்வாண்டுக்கான அறிவியல் விழா நேர்த்தியான முறையில் திட்டமிட்டு நடத்தப்படவிருப்பதாக சுபாஷ் குறிப்பிட்டார்.

இந்த அறிவியல் விழா சம்பந்தப்பட்ட மேல் விவரங்களுக்கு கீழ்கண்ட தொடர்பு எண் அல்லது மின்னஞ்சல் மூலம் அஸ்தியை தொடர்பு கொள்ளலாம். மேலும், இவ்விழா குறித்த விவரங்கள் ASTI எனும் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் ஆய்வாளர் அறிவியல் விழா செயற்குழு:
No.16A, Jalan 21/12, Sea Park, 46300 Petaling Jaya, Selangor Darul Ehsan.
தொலைப்பேசி எண்: 03-78778571/ 03-78655557
தொலைநகல் எண்: 03-78729551
மின்னஞ்சல் முகவரி: nsfyc00@gmail.com
இணையத்தளம்: www.nsfyc.org

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker