Latestமலேசியா

பிரபல நடனக் கலைஞர் ரவிஷங்கர்: நலம்பெற கலைஞர்கள் பிரார்த்தனை!

கோலாலம்பூர்,பிப்.4- அஸ்தானா ஆர்ட்ஸ் ரவிஷங்கர்… அவரை தெரியாதவர்கள் மிகக் குறைவே. இந்திய பாரம்பரிய நடனத்தை, ‘ஃப்யூஷன்’ இசையில்கூட அதன் அழகியல் பிசறாமல் ஆடலாம் என்பதனை மலேசிய கலையுலகத்தில் மெய்ப்பித்துக் காண்பித்தவர் ரவிஷங்கர்.

இந்நிலையில், 42 வயதாகும் ரவிஷங்கர் தற்போது நோய்வாய்ப்பட்டு கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக வெளிவந்துள்ள தகவல் கலையுலகத்தில் உள்ளவர்களையும், அஸ்தானா ஆர்ட்ஸ் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. எனினும், மருத்துவமனையில் இருக்கும் அவர் சீக்கிரமே உடல்நலம் தேறி வர வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. ரவிஷங்கர் குணமடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்வதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அஸ்தானா ஆர்ட்ஸின் தோற்றுநரான ரவிஷங்கர், கோலாலம்பூரில் தனது நடனப்பள்ளியைத் தொடங்கி ஏராளமான கலைஞர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்து வந்தார். அவரது நடனப்பள்ளியில் நடனம் பழகியவர்கள் அதிகமானோர் இன்று கலையுலகில் பிரபலம் ஆகியுள்ளனர்.

வெறும் நிகழ்ச்சிகளில் ஆடுவதோடு ரவிஷங்கர் நிறுத்துக்கொள்ளவில்லை. நாட்டிய நடனம், மேடை நாடகம் என்று தனது கலைப் பயணத்தை அடுத்தடுத்த பரிணாமங்களுக்கு இட்டுச் சென்றார் அவர். அப்படி அவரது இயக்கத்தில் அரங்கேறிய எத்தனையோ படைப்புகள் பிரமாண்டமானவை; அபாரமானவை; ரசிகர்களை லயிக்க வைப்பவை.

சிலப்பதிகாரம், ஷாமசுந்தரா, தசமஹாவித்யா, திருநங்கை, நடுவன், ஹனுமன், பரமேஸ்வரா போன்ற படைப்புகளின் வழி அஸ்தானா ஆர்ட்ஸை ரவிஷங்கர் புகழின் உச்சிக்கு கொண்டுச் சென்றார். அவரது கலைப் பணி தொடர அவர் நோயிலிருந்து விரைந்து மீண்டெழுந்து வர வேண்டும் என்று பிரார்த்திப்போம்!

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker