Latestமலேசியா

கூச்சலிட்டவாறு வந்தது அந்தக் கும்பல்!- அடிப் மரண விசாரணையில் சாட்சியம்

ஷா ஆலாம், பிப்.11- சீபீல்ட் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய கலவரத்தில் இறந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப்பின் மரண விசாரணை இன்று ஆரம்பமாகியுள்ள வேளையில், அச்சம்பவம் கட்டுப்படுத்த இயலாத நிலையில் இருந்ததாக அன்றைய தினம் பணியில் இருந்த மற்றுமொரு தீயணைப்பு வீரரான முகமட் எல்லீஸா முகமட் நோர் கூறினார்.

கடந்த நவம்பர் 27-ஆம் தேதியன்று, அந்த ஆலயத்தின் கலவரம் குறித்து தகவல் அறிந்து, தீயணைப்பு வாகனம் அப்பகுதியைச் சென்றடைந்த போது, அந்த வாகனத்தை கிட்டத்தட்ட 50 பேர் சூழ்ந்து கொண்டனர் என்று தீயணைப்பு வாகன ஓட்டுநரான எல்லீஸா தெரிவித்தார்.

“தீயை அணைக்காதீர்..  திரும்பி போ…” என்று அங்கு சூழ்ந்திருந்தவர்கள் எங்களை நோக்கி கத்தினர். அதனை அவர்கள் பலமுறை உரக்கக் கூறினர். எங்களை நோக்கி சைகையசைத்து, தீயை கட்டுப்படுத்த வேண்டாம் என்று அவர்கள் கூச்சலிட்டனர்” என்று அவர் ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் சொன்னார்.

அந்தக் கும்பலைச் சேர்ந்த ஆடவர்கள், தலைக் கவசங்கள் மற்றும் செங்கற்களை கையில் வைத்திருந்தனர் என்றும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

அந்தக் கும்பலில் ஒருவர், நீண்ட ஆயுதம் ஒன்றை கையில் வைத்திருந்ததாகவும், அதனை பயன்படுத்தி, தீயணைப்பு வண்டியின் முன் கண்ணாடியை அவர் உடைத்ததாக எல்லீஸா குறிப்பிட்டார்.

“அந்தக் கண்ணாடி உடைந்து, தீயணைப்பு வண்டியில் உள்ள தீயணைப்பு வீரர்களுக்கு பாதகம் நேரக் கூடும் என்று உணர்ந்து நான் பயந்து விட்டேன்” என்று அவர் கூறினார்.

இதனிடையில், நவம்பர் 26-ஆம் தேதியிலிருந்து 27-ஆம் தேதி வரை, இரு வாகனங்களுக்கு தீ மூட்டப்பட்டதை தாம் நேரில் கண்டதாக டி.எஸ்.பி முகமட் நஸிர் ரஹ்மான் தெரிவித்தார்.

எல்லீஸா கூறிய அந்தக் கும்பல், தீயணைப்பு வண்டியை சூழ்ந்து கொண்டதை தாமும் கண்டதாக அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

“சிலர் தீயணைப்பு வண்டியை நோக்கி பொருட்களை வீசியதை நான் பார்த்தேன். ஆனால், அதன் பின்னர் அங்கு என்ன நேர்ந்தது என்பதை நான் காணவில்லை” என்று அவர் சொன்னார். அச்சம்பவம் நடந்த போது, முகமட் அடிப் அந்தத் தீயணைப்பு வண்டியில் இருந்ததாக குறிப்பிடப் பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker