Latestமலேசியா

போலி பட்டங்கள்; பக்காத்தான் அரசின் கொள்கை ஆட்டம் காணுமா?

கோலாலம்பூர், பிப்.11- வெளியுறவு துணை அமைச்சர் டத்தோ மர்ஜுகி யாஹ்யா மட்டுமல்லாது, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் பொய்யான பட்டப் படிப்பு சான்றிதழை வைத்திருக்கின்றனர் என்று பல தகவல்கள் தொடர்ந்து பகிரப் பட்டு வருகின்றன.

இங்கிலாந்தின் கேம்ப்ரீட்ஜ் பல்கலைக் கழகத்தின் பட்டச் சான்றிதழை தாம் வைத்திருப்பதாக கூறி, அதன் பின்னர் அது மற்றுமொரு கேம்ப்ரீட்ஜ் பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் என்று மர்ஜுகி மாற்றிக் கூறியதை தொடர்ந்து பல்வேறான சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன.

தற்காப்பு அமைச்சர் முகமட் சாபு, வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சர் ஜுரைடா கமாருடின், ஜொகூர் மாநில மந்திரி பெசார் ஒஸ்மான் சாபியான், மற்றும் பேரா மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் போல் யொங் சூ கியோங் ஆகியோர் போலிப் பட்டச் சான்றிதழ்களை வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேர்மையின் அடிப்படையில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அமைக்கப் படுவதாக அரசாங்கம் கூறியுள்ள வேளையில், இவ்வாறான தகவல்கள், அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றன என்று பினாங்கு நிறுவனத்தின் அரசியல் ஆய்வாளர் வோங் சின் ஹுவாட் கூறினார்.

“பொலிச் சான்றிதழை வைத்திருப்பதாக உறுதிப் படுத்தப்பட்ட அமைச்சர்கள் அல்லது துணை அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும். போலிச் சான்றிதழ் வைத்திருப்பதாக கூறப்படும் அமைச்சர்கள் தங்களின் பட்டப் படிப்பு தொடர்பில் உண்மையாக ஆதாரங்களை காண்பிக்க வேண்டும்” என்று அவர் சொன்னார்.

“மாட் சாபு மற்றும் ஜுரைடா ஆகிய இருவரும் தங்களிடம் பட்டப் படிப்பிற்கான சான்றிதழ் இல்லை என்று தெளிவு படுத்தி விட்டனர். பட்டப் படிப்பு படிக்காவிடில் பரவாயில்லை. அரசியல்வாதிகள் அனைவரும் கல்வி அறிஞர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், யாரும் பொய்யான சான்றிதழ்களை வைத்திருக்கக் கூடாது” என்று வோங் குறிப்பிட்டார்.

“மர்ஜுகி போன்றோர் தொடர்ந்து பதவியில் நீடித்தால், அதனால் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும். மக்கள் மற்றும் நாட்டின் நலனை அவர்கள் பெரிதாக கருத்தில் கொள்ளாவிடில், அவர்களின் கட்சியின் நலன் குறித்து அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று அவர் அறிவுறுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker