Latestஉலகம்

கருப்பையை விட்டு வெளியே எடுத்து  மீண்டும்  குழந்தையை உள்ளே வைத்து சாதனை!

லண்டன், பிப். 12- பிரிட்டனில் அறுவை சிகிச்சைக்காக குழந்தையை கருப்பையிலிருந்து வெளியில் எடுத்த மருத்துவர்கள், சிகிச்சை முடிந்ததும் மீண்டும் உள்ளே வைத்துள்ள ஆச்சர்யம் நடந்துள்ளது.

பிரிட்டனில் தாதியராக பணிபுரிந்து வரும் பெத்தான் சிம்சன் (வயது 26) என்கிற இளம் தாய் 20 வாரக் கர்ப்பிணியாக இருக்கும் போது செல்ப்ஸ்போர்டு பகுதியில் செயல்பட்டு வரும் புரூம்பீல்ட் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை ஒன்றை மேற்கொண்டார்.

அப்போது சாதாரணமாக குழந்தைகளுக்கு இருப்பதை விட தலை இருக்கும் நிலை மாறி இருந்தது. பின்னர் மருத்துவர்கள் தாய் மற்றும் குழந்தையை ‘ஸ்கேன்’ செய்து பார்த்த போது குழந்தையின் முதுகெலும்பு வளர்ச்சியில் குறை இருப்பதை கண்டறிந்துள்ளார்.

கருவிற்குள் இருக்கும் போதே குழந்தைக்குச் சிகிச்சை செய்வது ஆபத்தானது என்றாலும் கூட தற்போது சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் குழந்தை பிறந்தவுடன் நடக்கும் திறனைப் பாதிக்கும் என்பதை பற்றி மருத்துவர்கள் விளக்கி கூறியுள்ளனர்.

இதனைப் பற்றி நன்கு யோசித்த பெத்தான் சிம்சன் மற்றும் அவருடைய கணவர் அறுவை சிகிச்சைக்கும் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து பெல்ஜியத்தில் மட்டுமே நடைமுறையில் உள்ள இந்த அறுவை சிகிச்சையானது லண்டன் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது.

பெல்ஜியம் மருத்துவர்களுடன் இணைந்து லண்டன் மருத்துவர்களும் இதில் ஈடுபட்டனர். குழந்தையை பத்திரமாக வெளியில் எடுத்து அதற்கான சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள் பின்னர் மீண்டும் குழந்தையை கர்ப்பப் பையிலே வைத்து தைத்தனர்.

இந்த அறுவை சிகிச்சையில் லண்டன் பல்கலைக்கழக கல்லூரி  மருத்துவமனையில் இருந்து சிறந்த வல்லுனர்கள் பங்கேற்றனர். இச்சம்பவமானது மருத்துவ உலகில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் துணிவுடன் அறுவை சிகிச்சைக்கு தயாரான தம்பதியினருக்கு  மருத்துவர்கள் நன்றியினை தெரிவித்துள்ளனர்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker